26/08/2023 (904)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பகைமாட்சியை அடுத்து பகைத்திறம் தெரிதல் என்னும் அதிகாரத்தை அமைத்துள்ளார்.
பகை மாட்சியில் மாட்சிமை கொண்ட பகைகளைப்பற்றிச் சொன்னார். அஃதாவது, எளிதில் வெல்லக் கூடியப் பகைகளின் இயல்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை பட்டியலிட்டார்.
அஃதாவது, அன்பிலன், ஆன்ற துணையிலன், தான் துவ்வான் (862), அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான் (863), வெகுளி நீங்கான், நிறையிலன் (864), வழி நோக்கான், வாய்ப்பன செய்யான், பழி நோக்கான், பண்பிலன் (865), காணாச் சினத்தான், கழி பெரும் காமத்தான் (866), அடுத்திருந்து மாணாத செய்வான் (867), குணன் இலன், குற்றம் பலவாயினன் (868), அறிவிலா அஞ்சும் பகைவன் (869) இப்படிப் பல குறிப்புகளைக் காட்டினார்.
அந்தக் குறிப்புகளைக் காட்டியவர், அது போன்ற பகைகளை அழிக்க ஒருவன் முயலவில்லை என்றால் அவனுக்குப் புகழ் இருக்காது என்றும் தெரிவித்தார் குறள் 870 இல்.
மேலே சொன்ன பகைகள் மாணாகிய பகைகள். மாண் என்றால் மாட்சிமை. வெல்வது யார் தோற்பது யார் என்பது மிகத் தெளிவு!
அடுத்து வரும் அதிகாரத்தில் மாணாத பகையை ஆக்கும் குற்றமும், அப்படி பகையானது ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டால் அதனைக் களைவது குறித்தும் பகைத் திறம் தெரிதலில் சொல்லப் போகிறார்.
பகைத் திறம் என்பது பகையினது திறம் (ஆறாம் வேற்றுமை) என்றும் பகையின் கண் திறம் (ஏழாம் வேற்றுமை) என்றும் இரண்டாக விரியும். இஃது இரட்டுற மொழிதல்.
இனிச் சொல்லப்போகும் பகையிடம் கவனம் தேவை. எச்சரிக்கை என்கிறார். விளையாட்டுக்குக்கூட வலிய சென்று வண்டியில் ஏறிவிடக் கூடாது!
“பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.” --- குறள் 871; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
பகையென்னும் பண்பு இல் அதனை = பகை என்னும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று = ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பத் தக்கது அன்று.
பகை என்னும் தீமை பயப்பதனை ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பத் தக்கது அன்று.
அடுத்துவரும் குறளில் முதல் குறிப்பைக் கொடுக்கிறார். கல்லடிபட்டாலும் படலாம் சொல் அடி படக்கூடாது என்கிறார்!
யாருடைய சொல் அடி? சொல்லேர் உழவர் சொல் அடி படக்கூடாதாம்.
சொல் ஏர் உழவர் என்றால் யார்? கற்றறிந்த அறிஞர் பெருமக்கள்தாம் அவர்கள். அவர்கள் தங்கள் அறிவைக் கொண்டு சாய்த்துவிடுவார்கள்.
ஏர் என்றால் அழகு. உழவர் என்றால் விளைவிப்பவர்.
சொல்களைக் கொண்டு மிக நேர்த்தியாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்!
வில் ஏர் உழவர் என்றால்? ஆயுதங்களைக் கொண்டு ஆற்றலுடன் அழகாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்!
சரி நாம் குறளுக்கு வருவோம்.
“வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.” ---குறள் 872; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
வில் ஏர் உழவர் பகை கொளினும் = வில்லினைக் கொண்டு ஆற்றலுடன் அழகாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்களின் பகையைக் கொண்டாலும் கொள்க; சொல்லேர் உழவர் பகை கொள்ளற்க = சொல்களைக் கொண்டு மிக நேர்த்தியாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்களின் பகையைக் கொள்ளாது ஒழிக.
வில்லினைக் கொண்டு ஆற்றலுடன் அழகாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்களின் பகையைக் கொண்டாலும் கொள்க; சொல்களைக் கொண்டு மிக நேர்த்தியாகத் தங்களுக்கு வேண்டியச் செயல்களைச் சாதிப்பவர்களின் பகையைக் கொள்ளாது ஒழிக.
“சொல்களைக் கொண்டு” என்றால் “நீதி நூல்களைக் கற்றுச் சிறந்த அறிவைக் கொண்டு” என்று பொருள். அவர்கள் சூழ்ச்சிகளால் வீழ்த்தவும் வல்லவர்கள். கவனம் தேவை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments