04/06/2023 (822)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அவையஞ்சாமையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“கிளோசா போபியா” என்றால் அவைக்கு பயம்! கிரேக்க மொழியில், கிளோசா (glossa) என்றால் நாக்கு; போபோஸ் (Phobos) என்றால் பயம். பேசுவதற்கு பயம்தான் Glossa phobia.
பல மன நல ஆய்வுகளின் முடிவுகள் என்னவென்றால் மனிதனுக்கு ஆக அதிகமான பயம் எதற்கு என்றால் மரணத்தை சந்திப்பதுதானாம். ஆனால், அதனினும் அதிகமாகப் பயப்படுவது, சபைகளில் பேசுவதாம். மேலும், அந்த ஆராய்ச்சி சொல்வது என்னவென்றால், தனி நபர்களிடம் பேசக்கூட சிலருக்குப் பயம் இருக்குமாம். இது நிற்க.
வாளை எடுத்தால், வாழை மரம் போல எதிர்த்து வருபவர்களையெல்லாம் சாய்த்துவிடும் வல்லமை படைத்த மாவீரர்கள் இந்த உலகில் பலர் இருக்கக் கூடும். அதே சமயம், அவைதனில் பேச அழைத்தால், அஞ்சாமல் பேச முனைபவர்கள் மிகச் சிலராகத்தான் இருப்பர் என்கிறார் நம் பேராசான்.
“பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.” --- குறள் 723; அதிகாரம் – அவையஞ்சாமை
எளியர்= பலர் = எளிதில் காணக் கூடியவர்கள்; அரியர் = சிலர் =காணக் கிடைக்காதவர்கள்.
பகையகத்துச் சாவார் எளியர் = எதிர்த்துவரும் பகையினடம் அஞ்சாமல் புகுந்து போராடிச் சாகக் கூட பயப்படமாட்டாதவர் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர் = (ஆனால்,) ஒரு சபையினில் பேச பயப்படாமல் துணிபவர்கள் மிகச் சிலர்தான்.
எதிர்த்துவரும் பகையினடம் அஞ்சாமல் புகுந்து போராடிச் சாகக் கூட பயப்படமாட்டாதவர் பலர். ஆனால், ஒரு சபையினில் பேச பயப்படாமல் துணிபவர்கள் மிகச் சிலர்தான்.
முதல் மூன்று பாடல்கள் மூலம் அவை அஞ்சாதவர்களின் சிறப்பு கூறப்பட்டது. அதாவது, அவர்கள்: வகையறிந்து வல்லவை வாய்சோரார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார்; அவையகத்து அஞ்சாதவர். காண்க 01/06/2023 (819), 02/06/2023 (820).
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires