08/06/2023 (826)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
குறள் 726 இல், வலிமையும் வீரமும் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு; கற்றறிந்த அவையினில் பேச அஞ்சுபவர்க்கு நூல்களோடு என்ன தொடர்பு? என்றார். காண்க 07/06/2023 (825).
மேலும் தொடர்கிறார். போருக்கு அஞ்சுபவனிடம் இருக்கும் கூரிய வாளும், அவைக்கு அஞ்சுபவனிடம் இருக்கும் அறிவுசால் நூல்களும் ஒன்று என்கிறார்.
போர்களத்திற்கு அஞ்சுபவனுக்கு வாள் எதற்கு?
கற்றறிந்த அவைக் களத்திற்கு அஞ்சுபவனுக்கு நூல் எதற்கு? என்கிறார்.
“பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்.” --- குறள் 727; அதிகாரம் – அவையஞ்சாமை
பகை அகத்துப் பேடி கை ஒள்வாள் அஞ்சும் = பகையினடம் அஞ்சுபவனின் கையில் உள்ள கூரிய வாள் அஞ்சும்;
அவையகத்து அவன் கற்ற நூல் அஞ்சும் = அவையின்கண் அஞ்சுபவன் கற்ற நூல் அஞ்சும்.
வாளும், நூலும் அஞ்சுமா? ஒரு கற்பனைதான்!
அஞ்சும் என்றால் வெட்கித் தலை குனியும்.
இந்தத் தொடை நடுங்கியிடம் நாம் மாட்டிக் கொண்டோமே என்று கூரிய வாளும், அறிவுசால் நூலும் நாணும்.
மேற்கண்ட உரை என் கற்பனை. ஆனால், தமிழறிஞர்களின் உரை கீழ்கண்டவாறு:
மூதறிஞர் மு.வரதராசனார்: அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.
மணக்குடவப் பெருமான்: பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும். மேல் பயனில்லையென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
பரிமேலழகப் பெருமான்: எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.
பெரும்பாலான அறிஞர் பெருமக்களின் உரைகள் என்ன சொல்கிறது என்றால் கூர் வாளும், நல்ல நூல்களும் அஞ்சுபவனிடம் இருந்தால் பயன் இல்லை என்பதாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments