17/04/2022 (415)
இன்னாசெய்யாமை (32ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளும், அன்புடைமை (8ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளும் முன்பொரு நாள் பார்த்திருந்தோம். காண்க 12/03/2021 (54).
மீள்பார்வைக்காக:
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.”- குறள் 314; அதிகாரம் – இன்னாசெய்யாமை
“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.” ---குறள் 76; அதிகாரம் – அன்புடைமை
இன்னாசெய்யாமை என்றால் மற்றவர்கள் துன்பப்படும்படியும் துயரப்படும்படியும் இன்னாத (இனிமை பயக்காத) செயல்களைச் செய்யாமல் இருப்பது.
செயல்கள் இருவகைப் படும். ஆங்கிலத்தில் by commission, by omission என்று சொல்கிறார்கள். அதாவது நாமே முனைந்து செய்வது அல்லது வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது.
முன்பெல்லாம் தட்டச்சு செய்பவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் E&OC என்று தட்டச்சு செய்வார்கள். E&OC என்றால் Errors and omissions excepted. இப்போ அந்தப் பழக்கம் இல்லாமலே போயிடுச்சு.
அதாவது, சின்ன சின்ன தவறுகளையும், விட்டுப் போனவைகளையும் மன்னிச்சுடுங்கன்னு பொருள். கொஞ்சம் adjust பண்ணி படிங்க என்பது பொருள். உறவுகளுக்கும் அது பொருந்தும்!
மன்னிப்பதையும், மறப்பதையும் மக்கள் அவங்க தகுதிக்கு சரியில்லைன்னு நினைக்கறாங்க போல. இது நிற்க.
ஓரு அதிகாரம் (32ஆவது) முழுக்கச் சொல்லியிருந்தாலும்கூட மீண்டும் மீண்டும் ‘இன்னாசெய்யாமை’ வலியுறுத்துகிறார். அத்து மீறாதீர்கள்; அன்போடு இருங்கள் எனபதுதான் நம் பேராசானின் வாக்கு.
பிரித்துவிடலாம் என்று பொருந்தாக் காரியங்களை ஒருவர் செய்தாலும்கூட மேலும் அந்த மாறுபாடு வளருமே என்று கருதி இன்னாதவற்றை நீங்கள் செய்யாதீர்கள் என்று சொல்கிறார்.
“பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய்யாமை தலை.” --- குறள் 852; அதிகாரம் - இகல்
பகல்கருதிப் பற்றா செயினும் = ஒருவர் வெட்டிவிடலாம் என்று கருதி பொருந்தாக் காரியங்களைச் செய்தாலும்கூட; இகல்கருதி இன்னாசெய்யாமை தலை = அந்த மாறுபாடுக்குத் துணையாக இன்னாதவற்றைச் செய்யாமை ரொம்ப முக்கியம்.
நம்மாளு: ஐயா, நாமளும் மனுசன்தானே. கோபம் வரத்தானே செய்யும். இது எப்படி முடியும். நாம என்ன மரக்கட்டையா?ன்னு ஆசிரியரைக் கேட்டார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments