top of page
Search

பசக்கமற் பட்டாங்கென் ... 1189, 1190, 05/03/2024

05/03/2024 (1095)

அன்பிற்கினியவர்களுக்கு:

இந்த மனம் இப்படி அப்படி ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் அது என்று சொல்லும். மறு நிமிடம் அது எப்படிச் சரியாகும் என்று கேட்கும்.

 

அது மட்டுமல்ல, மனமானது நமக்கு எது பிடிக்குமோ அதை மட்டும்தான் சொல்லும். நம்மை எதிர்த்துப் பேசாது. தவறு அவருடையதுதாம் என்றால் அதற்காக ஆயிரம் வாதங்களை எடுத்து வைக்கும். இல்லை, இல்லை அவர் நல்லவர் என்றால் உடனே அப்படியே திருப்பி அதற்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லும். அது ஒரு விசித்திரமான வழக்குரைஞர். அதன் பின்னால் போனால் நம்மை மகிழ்ச்சியாக இருக்கவிடாது.

 

நம் பின்னால் மனம் வரவேண்டும். இதற்குப் பயிற்சி முக்கியம். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறாள் அவள்.

 

நாமே அவரைத் தூற்றினால், உடனிருப்போர்களும் ஆமாம் போட்டுக் கொண்டு அவரைத் தூற்றுகிறார்கள். பல சமயம் உடனிருப்போர்களும் என் மனத்தைப் போலவே இருக்கிறார்கள்.

 

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின். – 1189; - பசப்புறு பருவரல்

 

நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் = என்னை விரும்பும் என்னவர் நல்ல செயலைச் செய்ய சென்றுள்ளார் என்று எல்லாரும் அறிய வாய்ப்பிருக்கும் என்றால்; என் மேனி பட்டாங்கு பசக்க = என் மேனி உண்மையாகப் பசலையால் பாதிக்கப்படட்டுமே!; மன் – ஒழியிசை.

 

என்னை விரும்பும் என்னவர் நல்ல செயலைச் செய்ய சென்றுள்ளார் என்று எல்லாரும் அறிய வாய்ப்பிருக்கும் என்றால் என் மேனி உண்மையாகப் பசலையால் பாதிக்கப்படட்டுமே!

 

பட்டாங்கு என்றால் நீதி நூல்கள், உண்மை என்று பொருள்படும்.

 

நம் ஒளவையார் பெருந்தகை நல்வழி என்னும் நூலில் ஒரு பாடலைத் தந்துள்ளார். நமக்குத் தெரிந்த பாடல்தான். அந்தப் பாடலில் பட்டாங்கு என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

 

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி. – பாடல் 2; நல்வழி

 

கொடுத்துப் பெருமையடைபவர்கள் ஒரு சாதி; கொடுக்காமல் ஒளிப்பவர்கள் ஒரு சாதி. அவ்வளவே. இவைதாம் நீதிநூல்கள் சொல்வதும், உண்மையான உண்மையும் என்கிறார்.

 

அவள்: என்னவர் என்ன சாதி என்று எனக்குத் தெரியுமாதலால் இந்தப் பசலை எனக்கு வந்தால்தான் என்ன? அதற்காக என்னைக் கேலி பேசினால்தான் என்ன? என்று கேள்விகளை எழுப்புகிறாள்.

 

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின். – 1190, - பசப்புறு பருவரல்

 

நயப்பித்தார் = என்னவர் என்னிடம் நயமாகச் சொல்லித்தானே சென்றார். நானும் அதற்குச் சம்மதித்தேன் என்பதும் உண்மைதானே!; நல்காமை தூற்றார் = இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையை நல்காமையால் அவரைப் பிறர் நிச்சயமாகத் தூற்றார்; பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே = அவர்கள் தூற்றத்தான் நான் இருக்கிறேனே. எனக்குப் பசலை நோய் படர்ந்திருக்கிறது என்று ஊரார் பேசிக் கொள்ளட்டுமே? இதுவும் நன்மைக்கே.

 

என்னவர் என்னிடம் நயமாகச் சொல்லித்தானே சென்றார். நானும் அதற்குச் சம்மதித்தேன் என்பதும் உண்மைதானே! இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையை நல்காமையால் அவரைப் பிறர் நிச்சயமாகத் தூற்றார். அவர்கள் தூற்றத்தான் நான் இருக்கிறேனே! எனக்குப் பசலை நோய் படர்ந்திருக்கிறது என்று ஊரார் பேசிக் கொள்ளட்டுமே? இதுவும் நன்மைக்கே.

 

ஒருவாறு நிலைக்கு வந்தாளா? மனம் விடுமா? பிரிவு என்பது நீடித்தால்?

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page