27/06/2023 (845)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அரண் என்ற எழுபத்து ஐந்தாவது அதிகாரத்தைத் தொடர்ந்து மிக முக்கியமான அதிகாரமான பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தை வைக்கிறார். இந்த அதிகாரத்திலும் சில குறள்களைச் சிந்தித்துள்ளோம்.
அதற்கு முன் பொருட்பாலின் முதல் அதிகாரமான இறைமாட்சி (39 ஆவது) அதிகாரத்தில் சில குறள்களை விட்டு விட்டு வந்துள்ளோம். அதனைத் தொடர்வோம்.
இறைமாட்சியின் முதல் குறளில் நம் பேராசான் என்ன சொல்கின்றார் என்றால் ஒரு தலைமைக்கு அல்லது அரசிற்கு ஆறு உறுப்புகள் நன்றாக அமைந்திருக்கணுமாம். அவையாவன: படை, குடி, கூழ், நட்பு, அமைச்சு, அரண் என்பன.
“படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.” --- குறள் 381; அதிகாரம் – இறைமாட்சி
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் = படையும், குடியும், கூழும், அமைச்சும், நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன்; அரசருள் ஏறு = அரசர்களுள் சிறந்தவன்.
(ஏறு = சிங்கம், காளை, சுறா, எருமை... இப்படி பல பொருள்கள்)
படையும், குடியும், கூழும், அமைச்சும், நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசர்களுள் சிறந்தவன்.
இங்கே குடி என்பது குடி மக்களைக் கொண்ட நாட்டினைக் குறிக்கும்.
அமைச்சு, நாடு (குடி), அரண், பொருள், படை, நட்பு என்பதுதான் வரிசை முறையாக இருக்க வேண்டும் என்றும் பாடலின் இலக்கணம் கருதி இந்த வரிசை முறையை மாற்றி வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கிறார் பரிமேலழகப் பெருமான்.
இந்த ஆறு அங்கங்களூள் அமைச்சு என்னும் (64 ஆவது) அதிகாரத்தையும், நாடு என்னும் (74 ஆவது) அதிகாரத்தையும், அரண் என்னும் (75 ஆவது) அதிகாரத்தையும் நாம் ஒரு முறை முழுமையாகப் பார்த்துள்ளோம்.
பொருள், படை, நட்பு போன்ற மற்ற உறுப்புகளுக்கு சிறப்பான அதிகாரங்களை அமைத்துள்ளார்.
என்ன களைப்பாக இருக்கா? இருக்காதா பின்னே? கடலின் ஆழத்தில் சென்றுதான் முத்துக்களை எடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் மூச்சு பிடித்து உள்ளே சென்று பார்த்துவிட வேண்டியதுதான்! முயலுவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires