07/11/2023 (976)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வெஃகுதல் என்பது நடுவு நிலைமைத் தவறி பிறர்க்கு உரித்தானதைத் தட்டிப் பறித்தல், கவர நினைத்தல், வஞ்சகமாக ஏமாற்றல், பிறன் பொருள் மீது பேராசை கொள்ளல் இப்படி பல பொருள்படும்.
சரி, அப்படி கவர்வதாலே உடனடியாகப் பெரும் பயன்கூட எய்தலாம்! இருப்பினும், நடுவு நிலைமையில் இருந்து விலகிவிடுவோமோ என்று அஞ்சி அந்தப் பழியைத்தரும் பாதகத்தைச் செய்யார் என்கிறார் நம் பேராசான்.
“படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.” --- குறள் 172; அதிகாரம் – வெஃகாமை
நடுவன்மை நாணுபவர் = எங்கே நாம் நடுவு நிலைமையில் இருந்து விலகி விடுவோமோ என்று அஞ்சுபவர்; படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் = பிறன் பொருளால் பெரும் பயனடையலாம் என்ற போதிலும் அந்தப் பழியைத்தரும் படுபாதகச் செயலைச் செய்யார்.
எங்கே நாம் நடுவு நிலைமையில் இருந்து விலகி விடுவோமோ என்று அஞ்சுபவர், பிறன் பொருளால் பெரும் பயனடையலாம் என்ற போதிலும் அந்தப் பழியைத்தரும் படுபாதகச் செயலைச் செய்யார்.
நடுவு என்பதே ஒருவன் பொருளுக்கு மற்றவன் உரித்தானன் அல்லன் என்பதுதான்.
இந்தக் குறளில் வரும் முதல் “படு” என்ற சொல் பெரும் என்ற பொருளில் வந்துள்ளது. இந்தப் ‘பெரும்’ என்பது பெருமை மிக்கது அல்ல. இது எவ்வாறு எனில், படுபாதகம், படுகுழி, படுபாவி என்றவாறு. அதைப்போலவே படுபயன்!
கில்லாடி என்றால் குயுக்தியைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைப்பவன். படே கில்லாடி என்றால் கில்லாடியைவிட கீழ்த் தரமானவன்.
நம் பேராசானின் மொழி ஆளுமை கூர்ந்து நோக்கத்தக்கது.
இரண்டாவதாக வரும் “படு” என்னும் சொல் விழும், தரும் என்ற பொருளில் வந்துள்ளது.
வந்த சொல்லே மீண்டும் வந்து வேறு பொருளை உணர்த்துவதால் இஃது, சொல் பின்வருநிலையணி. இது நிற்க.
ஒருவர்க்கு உரித்தானதைத் தன் வலிமையால் வலிய மற்றவர் கவரும்போது அந்தப் பயன் நீடித்து நிற்க வழியில்லை. சிறிது காலத்திற்கு வேண்டுமானால் இன்பம் பயக்கலாம். எனவே, இந்தச் சிற்றின்பத்தை விரும்பாமல் ஏனைய இன்பங்களை விரும்புபவர்கள் அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள் என்கிறார்.
“சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.” --- குறள் 173; அதிகாரம் – வெஃகாமை
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே = நிலையில்லாச் சிறிய இன்பங்களை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள்; மற்ற இன்பம் வேண்டு பவர் = ஏனைய இன்பத்தை வேண்டுபவர்கள்.
நிலையில்லாச் சிறிய இன்பங்களை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள், ஏனைய இன்பத்தை வேண்டுபவர்கள்.
மற்றைய இன்பம் என்பது குறைந்து மற்ற இன்பம் என்று வந்துள்ளது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments