02/03/2023 (728)
‘படி’ என்ற இரண்டு எழுத்து சொல்லுக்கு இருபது பொருள் சொல்வார்கள் போல! அவற்றுள் சில:
படி (வி.சொ.) – தங்கு, நிலை கொள், வாசி, மூழ்கு, கற்க ...
படி (பெ.சொ.) – நிலை, அளக்கப் பயன்படும் அளவை, பிரதி ... இப்படி சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். அதில் பூமி, உலகம் என்ற பொருளும் இருக்கு.
‘படி அளக்கிறவன்’ என்றால் நமக்குத் தேவையானவைகளை அளிப்பவர்களுக்கு நாம் பயன்படுத்தும் ஒரு சொலவடை.
‘படி உடையார்’ என்றால் இந்த நிலம் முழுவதும் ஆண்டவர்/ஆள்பவர். அதாவது, வளமிக்க பெரிய செல்வந்தர்.
‘படி உடையார் பற்று’ அதாவது அவர்களுடையச் செல்வம். அது தானே வந்து ஒருத்தனிடம் கொட்டினால் என்ன ஆகும்?
“நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்குச் சாதகம். – அது பொல்லாதாவனின் பையில் இருந்தால் எல்லா உயிர்க்கும் பாதகம் ...”
திரைப்படம் - யார் ஜம்புலிங்கம் (1972); இன்னிசை சித்தர் CS ஜெயராமன் அவர்களின் குரலில்.
நல்லவனிடமும் இல்லாமல் பொல்லாதவனிடமும் இல்லாமல் சோம்பித்திரிபவனிடம் சிக்கினால்?
கெட்டவனிடம் சேர்வதைவிட ‘நம்மாளு’ பரவாயில்லையே என்கிறீர்களா?
பொல்லாதவன்கூட ஒரு சிலருக்கு நல்லது செய்ய வாய்ப்புண்டு. ஆனால், சோம்பி இருப்பவனிடம் சேர்ந்தால் அவன் உள்பட அது யாருக்குமே பயன் தராதாம்!
“படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.” --- குறள் 606; அதிகாரம் – மடி இன்மை
படியுடையார் பற்று அமைந்தக் கண்ணும் = மிகப் பெரிய நிலப் பரப்பை ஆண்டவனின் செல்வம் தானாகவே வந்து சேர்ந்தாலும்; மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது = சோம்பி இருப்பவன் அந்தச் செல்வத்தால் பெரிய பயன் ஒன்றும் அடைதல் அரிது.
மிகப் பெரிய நிலப் பரப்பை ஆண்டவனின் செல்வம் தானாகவே வந்து சேர்ந்தாலும், சோம்பி இருப்பவன், அந்தச் செல்வத்தால் பெரிய பயன் ஒன்றும் அடைதல் அரிது. அவனுக்கும் உதவாது; வேறு எதற்கும் பயனில்லாமல் போகும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments