top of page
Search

பண்பிலான் பெற்ற ... 1000, 999, 16/05/2024

16/05/2024 (1167)

அன்பிற்கினியவர்களுக்கு:

பண்புடைமையில் எனக்கு மிகவும் பிடித்த குறள் எதுவென்றால் சிரித்த முகத்துடன் இருங்கள்; இந்த உலகையே சிறை பிடிக்கலாம் என்ற பாடல்தான். ஆனால், இந்தப் பாடலை எதிர்மறையில் சொல்லியிருப்பார். இந்தக் குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 04/09/2021.

 

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும் பாற்பட்டன்று இருள். - 999;  பண்புடைமை

ரொம்ப நன்றாக மலர்ந்து சிரிக்கத் தெரியாதவர்க்குப் பரந்து விரிந்த இந்த உலகம் எப்பொழுதும் இருளாகவே இருக்கும்.

 

சிரிக்கத் தெரிந்தாலோ, இந்த பூவுலகு மலர்ந்த பூக்களால் நிறைந்திருக்கும்!

 

சிரிப்பு என்பது ஒரு முக்கியமான பண்பு என்கிறார். அதனை நம் உடைமையாக்குவோம்.

 

அடுத்து பண்பு உடைமைக்கு முத்தாய்ப்பாக ஒரு குறள் சொல்லி நிறுத்த வேண்டும்.

 

அதற்குமுன், அண்மையில் ஒரு தகவலைப் படித்தேன். அதனைக் குறித்துப் பேசுவோம்.

 

நாவாய், கலம், வங்கம் என்ற சொல்களெல்லாம், நாம் இக்காலத்தில் கப்பல் (ship) என்கிறோமே அதனைக் குறிக்கும்.

 

ஒரு பெருங்கலத்தில் (Bulk Carrier / Bulker / Merchant ship) பட்டாணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்களாம். அந்தக் கலத்தில் இருந்த 56 வயதான கடலோடி (seafarer) ஒருவர்க்குக் கடுமையான தலைச்சுற்றல் அதனுடன் வயிறு மார்புப் பகுதிகளில் கடுமையான வலி. அந்தக் கப்பலில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த முதலுவிகளைச் செய்தும் பயனில்லை. அந்தக் கப்பலின் மாலுமி (Captain) அருகில் இருந்த கடற்கரை நகரத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கடலோடியை ஹெலிகாப்டர் உதவியுடன் ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

 

மருத்துவர்கள் கவனிப்பில் இருந்தபோதும் அவரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. இதயத் துடிப்புக் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டேயிருந்தது. சுய நினைவை இழந்தார். காற்றோடு கரைந்தும்விட்டார்.

 

நுரையீரலில் வீக்கம், ஒரே நேரத்தில் பல உறுப்புகள் செயலிழந்ததனால் இறப்பு என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், அதற்கான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை.

 

அந்தக் கப்பலில் இருந்த  41 வயதான ஒருவர்க்கும் அதே நிலை. அவரையும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த மேலும் பதினோரு பேரின் உடல்நிலை மோசமானது.

 

பாதிக்கபட்டவர்கள் அனைவரும், ஏதோ, இனம் புரியாத நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கப்பலை அலசி ஆராய்ந்தார்கள். இல்லை, இல்லை. அலசமால் ஆராய்ந்தார்கள்!

 

அவர்களின் உணவுகளைத் தயாரிக்கும் விதம், சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் கொண்டவர்கள் என்று சிலரைத் துருவித் துருவி விசாரணை செய்தார்கள். ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை.

 

அப்பொழுது, மாலுமிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்தப் பட்டாணி மூட்டைகளை ஏற்றும் போது அதற்குப் பூச்சிகளால் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் (pest control) இருக்க ஏதோ சில மருந்துப் பொட்டலங்களை அந்தப் பட்டாணி மூட்டைகளுடன் போட்டு வைத்தார்கள். அதை அவர் சொல்ல உடனே அந்தப் பட்டாணி பெட்டிகளைத் (containers) திறந்து அந்தப் பொட்டலங்களை ஆராய்ந்தார்கள். அவற்றில் இருந்தவை அலுமினியம் பாஸ்பைட் துகள்கள் (aluminum phosphide).

 

அந்தப் பட்டாணிப் பெட்டிகளைச் சரியானவிதத்தில் அடைக்கப்படாமல் இருந்ததனால் அந்த வேதிப் பொருளில் இருந்து வெளிவந்த புகை, கப்பலின் மற்ற பாகங்களுக்குள் பரவி அனைவரையும் பாதித்துள்ளது என்று கண்டறிந்தார்கள். பின்னர் அந்தக் கப்பலைச் சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். இஃது, 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.

 

சரி, இந்தக் கதைக்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம்?

 

கப்பல் என்னவோ நல்ல கப்பல்தான். கடல் பல கண்ட கப்பல்தான். அந்த நல்ல கப்பலும் அந்தத் தீய நச்சுப் பொருளால் பாதிக்கப்பட்டதனால், விளைவுகள் விபரீதமானதாக அமைந்தன.

 

இதனை அப்படியே குறளில் வடித்து வைத்துள்ளார் நம் பேராசான்!

 

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று. – 1000; - பண்பு உடைமை

 

கலம் = கப்பல், பாத்திரம்; பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் = பண்பிலாதவனிடம் சேர்ந்துள்ள பெருஞ்செல்வத்தால் பயன் இல்லாமல் போகும். அஃது எப்படியென்றால்; நன்பால் கலம் தீமையால் திரிந்து அற்று = நல்ல பால் நிறைக்கும் பாத்திரமேயானாலும், அதனின் தன்மை திரிந்து நஞ்சானால் அந்தப் பால் முழுமையும் பயனில்லாமல் போகுமே அவ்வாறு.

 

பண்பிலாதவனிடம் சேர்ந்துள்ள பெருஞ்செல்வத்தால் பயன் இல்லாமல் போகும். அஃது எப்படியென்றால், நல்ல பால் நிறைக்கும் பாத்திரமேயானாலும், அதனின் தன்மை திரிந்து நஞ்சானால் அந்தப் பால் முழுமையும் பயனில்லாமல் போகுமே அவ்வாறு.

 

அஃதாவது, கப்பலும் நல்ல கப்பல்தான்; அஃது ஏற்றிச் செல்லும் சரக்கும் நல்ல சரக்குதான்; அந்தச் சரக்கைக் காப்பாற்றி வைக்க அதனுடன் வைக்கப்பட்ட வேதிப் பொருளும் தேவையான ஒன்றுதான். ஆனால், அந்த வேதிப் பொருளின் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தி வைப்பதிலேதான் கவனக் குறைவு.

 

அதுபோல, அவனும் நல்லவனாகதான் இருந்தான்; செல்வமும் நன்மையைத் தரக்கூடியதுதான்; ஆனால், பிற சேர்க்கையினால் பாதிக்கப்பட்டான். இஃதும் இயற்கைதான்; ஆனால், அதனால் விளையும் விளைவுகளையும், குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் அவனே தீயவனாகிறான். அவனின் செல்வமும் தீமையைத் தவிர வேறென்ன வழங்கும். எனவே, பண்பு இலானும் ஆனான்.

 

எனவே, பண்பினை எப்பொழுதும் கட்டிக் காக்க வேண்டும் என்று முடிக்கிறார் பண்புடைமை அதிகாரத்தினை..

 

இது நிற்க. கப்பலில் வைக்கப்பட்ட வேதிப்பொருள் ஆபத்தாக மாறியது. புரிந்து கொள்ளலாம். ஆனால், அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரம்தான் அது!

எப்படித் தீமையால் திரியும்? அது எப்படிச் சாத்தியம்?

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

 



1 Comment


Reminded of related Kural இடுக்கண் வருங்கால் நகுக

Like
Post: Blog2_Post
bottom of page