top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம் ... 242; குறள்கள் - 1062, 1053

19/07/2022 (508)

பகைவர்களுக்கு பேரிடியாக இருக்கும் கர்ணன், செய்புண்ணியம் அனைத்தையும் எடுத்துக் கொள் என்று அந்த வேதியனிடம் சொல்கிறான்.

“செய்புண்ணியங்களை நீ நீரால் தாரைவார்த்துக்கொடு” என்று அந்த வேதியன் கேட்க, நீருக்கு எங்கே செல்வது அந்தப் போர்களத்தில்?


தனது மார்பிலே பாய்ந்திருந்த ஒரு அம்பை பிடுங்கினான் கர்ணன். அங்கிருந்து பொங்கி வரும் இரத்தத்தையே நீராக எண்ணிக்கொள்ளுமாறுகூறி தானமாக அளிக்கிறான் கர்ணன். மனமகிழ்ந்து உருகினார் கண்ணபிரானாக வந்த அந்த வேதியர்.


மனம் மகிழ்ந்த அந்த வேதியர், “கர்ணா, உனக்கு ஏதேனும் வரங்கள் இருப்பின் சொல்லுக. அதை இப்போதே உனக்குத் தருகிறேன்.” என்றார்.


சாகும் தருவாயில் இருக்கும் எனக்கு வரங்கள் தருகிறேன் என்றால் …


ஓஓ எனக்கு இன்னும் பிறப்புகள் உளவோ?


சரி, சரி. நான் செய்த வினையால் எனக்கு எத்தனை பிறப்புகள் இருந்தால் என்ன வேதியரே, நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்.


“இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ எனக்கு அளித்தருள்” என்றான் கர்ணன். கண்ணபிரான் கலங்கினான்.


“மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து, 'நீ வேண்டிய வரங்கள் சொல்லுக; உனக்குத் தருதும்!' என்று உரைப்ப, சூரன் மா மதலையும் சொல்வான்: 'அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும், "இல்லை" என்று இரப்போர்க்கு "இல்லை" என்று உரையா இதயம் நீ அளித்தருள்!' என்றான்.” --- பாடல் 242, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.


உற்பவம் = பிறப்பு


கண்ணபிரான் மனதுக்குள் எண்ணிக்கொள்கிறார்: “கர்ணனிடம் இரப்பதும் (தானம் கேட்பதும்) பெருமைதான். எதையும் ஒளித்து வைக்காத மனம் கொண்டவன் கர்ணன். இல்லை என்று சொல்லாத இந்தக் கர்ணனிடம் கேட்டுப் பெறுவதே ஒரு அழகுதான்”


இது நிற்க. நாம் முன்பு பார்த்த இரு திருக்குறள்களை நினைவில் கொள்வோம்.


ஒருவன் இரந்து, அதாவது பிச்சை எடுத்துதான் உயிர் வாழ்தல் வேண்டின் இந்த உலகத்தைப் படைத்தவன் அழிந்து போகட்டும் என்று சாபம் கொடுக்கிறார் ஒரு குறளில் நம் பேராசான். காண்க 18/01/2022 (327).


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்.” --- குறள் 1062; அதிகாரம் – இரவச்சம்

அதே நம் பேராசான், இன்னொரு குறளில் என்ன கூறுகிறார் என்றால் பிச்சை எடுப்பதும் ஒரு அழகுதான் என்கிறார். காண்க 06/02/2022 (346).


கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று

இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து.” --- குறள் 1053; அதிகாரம் – இரவு


கரப்பு = ஒளித்தல்; கடன் = கடமை; கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று = தன் கடமையை அறிந்த கரப்பு இல்லா நெஞ்சங்களின் முன் நின்று; ஏர் = அழகு; ஏஎர் – அளபெடை; இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து = இரப்பதுகூட அழகுதான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






11 views0 comments

Comments


bottom of page