21/07/2022 (510)
கண்ண பரமாத்மா விசுவரூபம் எடுக்கிறார். வில்லி பாரதத்தில் கண்ணபிரான் இரு முறை விசுவரூபம் எடுக்கிறார். ஒரு முறை துரியோதனன், அவனது அவையிலே, கண்ணபிரானை படு குழி பாய்ச்சி கொல்ல நினைத்த போது எடுத்தது.அதைக் கண்ட உயிரினங்கள் எல்லாம் கலங்கின, அஞ்சின.
இரண்டாவது கர்ணணுக்காக வெளிப்படுவது. விசுவரூபம் என்றால் வேறோன்றுமில்லை. உண்மைப் பொருளை உணர்த்துவது, உணருவது. அதை உணரக்கூடிய பக்குவம் உள்ளவர்களுக்கு அது விசுவரூபம். ஏனையோருக்கு அது ஒரு உருவம் அவ்வளவுதான்.
Epiphany என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். (Epiphany- A divine manifestation or a moment of sudden understanding or revelation.) அந்தக் காட்சியில் அனைத்துமே புரிந்துவிடும்.
அந்த ஞானத்தைப் பெற பலரும் பல வழியில் முயல்கிறார்கள். சிலர் நெருப்பை மூட்டி யாகங்கள் செய்கிறார்கள்; சிலர் கங்கை போன்ற பல புண்ணிய நதிகளில் நீராடுகிறார்கள்; சிலர் மூச்சுக்காற்றை அடக்கி தவம் புரிகிறார்கள்;
சிலர் மலர்கள் தூவி பூசைகள் பல செய்கிறார்கள்; சிலர் மனதுக்குள்ளேயே சதா சர்வ காலமும் நினைந்து கொண்டு இருக்கிறார்கள்; சிலர் வாழ்க்கை போகங்களையெல்லாம் விட்டு உடம்பை பலவாறு வருத்திக் கொள்கிறார்கள்; இப்படி செய்யவொண்ணாத் தவங்களை இயற்றுகிறார்கள்.
இதெல்லாம் எதற்காக? அந்த ஒரு நொடி விசுவருபத்திற்காக!
“அவ்வாறு பல தவங்கள் புரிந்தவர்கள் பெற்றார்களோ என்னவோ எனக்குத் தெரியாது கண்ணா! யாருக்கும் எட்டா அந்தப் பெரும்பேறு இந்த உயிர் இருக்கும் போதே அவ்வாறு எல்லாம் வருந்தாமல் கிடைக்கப் பெற்றேனே” என்கிறான் கர்ணன்.
“அருந் தழல் மா மகம் புரிந்தும், கடவுள்-கங்கை ஆதியாம் புனல் படிந்தும், அனில யோகத்து இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும், எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி, அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணாப் பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப் பெரும் பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.” --- பாடல் 246, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
அருந் தழல் மா மகம் = யாகம்; புனல் = ஆறு; அனிலம் = காற்று
கீதை வாழ்க்கை வாழ்ந்தவன் கர்ணன்தான் என்பதற்கு வெளிப்படையான பயனினால் கிடைக்கும் இரண்டாம் குறிப்பு இது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
In Bhagavat Gita Krishna displays vishwarupa to Arjuna . in chapter 10 i think .( Vysar mahabharatham.) Is there any reference on that in Villi Bharatham.?