20/07/2022 (509)
கண்ணபிரான் தனது கரங்களைத் தாழ்த்தி கர்ணனின் கொடையை ஏற்றுக் கொள்கிறார்.
சிவனின் கண்ணீர்தான் ருத்ராட்சம் (ருத்ராக்ஷம்). ருத்திரன் + அட்சம் = ருத்திராட்சம். தனது அடியார்களை மெச்சி, சிவன் தனது கருணைக்கண்களில் இருந்து கசித்த நீரே ருத்திராட்சம் என்பது சிவனடியார்களின் கருத்து.
கிருஷ்னாட்சம் என்பது உண்டா? அதைப் பெற்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?
கிருஷ்னாட்சம் என்பது உண்டு. அதைப் பெற்றவன் கர்ணன் ஒருவனே!
“இல்லை என்று சொல்லா இதயம் அளித்தருள்” என்ற மைத்துனன் கர்ணனின் வேண்டுகோளைக் கேட்ட கண்ணபிரான் மனம் நெகிழ்ந்து, நெகிழ்ந்து உருகுகிறார்.
தனது வேடத்தைக் கலைக்கிறார். தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, தனது இரு மலர் கரங்களால், கர்ணனை ஆரத்தழுவிக் கொள்கிறார். கண்ணபிரான் கண்களில் இருந்து கண்ணீர் சொரிகிறது. அதனாலேயே கர்ணணை நீராட்டுகிறார் என்றால் கிருஷ்னாட்சத்தைப் பெற்றவன் கர்ணன் ஒருவனே!
“உனக்கு எத்தனை பிறவி இருப்பினும், அவற்றுள் ஈகையும், செல்வமும் தருகிறேன்; முடிவில் முக்தியையும் தருகிறேன்” என்றார் கண்ணபரமாத்மா.
“மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர்
உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை
நீர் ஆட்டி,
'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும்
செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும்
ஒருவனாம் மூர்த்தி.” --- பாடல் 243, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
கீதை வாழ்க்கை வாழ்ந்தவன் கர்ணன்தான் என்பதற்கு வெளிப்படையான பயனினால் கிடைக்கும் முதல் குறிப்பு இது. இரண்டாம் குறிப்பை நாளை பார்க்கலாம்.
அவன் கீதை வாழ்க்கைதான் வாழ்ந்தானா என்பதற்கு அவனின் வாழ்க்கை முறையிலேயே பல குறிப்புகள் உள்ளன. சமயம் இருப்பின் அது குறித்தெல்லாம் சிந்திப்போம் என்று என் ஆசிரியர் தெரிவித்தார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Krishnatsham hearing for the first time. thanks.