10/06/2022 (469)
அன்பைவிழையாது, பொருளிலே மட்டும் குறியாக இருக்கும் வரைவின் மகளிரின் இன்சொல் இழுக்குத் தரும் என்றார் முதல் குறளில்.
அதுவும் அவர்களின் இனிய உரைகள் எப்படி இருக்குமாம் என்றால் பயன் கருதி மட்டுமே இருக்குமாம். சும்மா, ஒரு பேச்சுக்குகூட ஒரு சொல்லை செலவு செய்ய அதாவது உபயோகப்படுத்த மாட்டார்களாம்.
அந்தப் பயன்கூட சிறப்பான பலனைத் தங்களுக்குத் தரும் என்றால் மட்டுமே கொஞ்சிப் பேசும் பண்பு கொண்டவர்களாம். நட்பிலே அந்த வகையினரை தீ நட்பு என்று நம் பேராசான் குறித்திருந்தார். தீநட்பு பலன் இல்லை என்றால் தானாகவே விலகிவிடவும்கூடும் இங்கே சொல்லவருவது, உயிர் குணமான காம சுகத்தால் மயங்கிவிடாதே, இது தொட்டுவிட்டால், தொடரும்; உள்ளதை சுரண்டாமல் விடாது என்பதுதான்.
அதனால், முதலிலேயே கவனமாக இரு. இது போல் எல்லாம் நடக்கும் என்பதை அறிந்து அந்தப் பக்கம் போகாமல் இரு என்கிறார்.
“பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.” --- குறள் 912; அதிகாரம் – வரைவில் மகளிர்
தூக்கி = ஆராய்ந்து; நள்ளுதல் = விரும்புதல்; நள்ளாதல் = விரும்பாதிருத்தல்; நள்ளா = விரும்பாமல்;
பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் = எப்படிப் பேசினால் எப்படி விழுவான், அவன் விழுவதால் தான் எப்படி சிறப்பாகவும் சீக்கிரமாகவும் பயன் அடையலாம் என்று ஆய்ந்து பேசும் பண்பு கெட்ட வரைவின் மகளிரிடம்;
நயன் தூக்கி நள்ளா விடல் = (வரைவின் மகளிரிடம் செல்லாமல் இருந்தால் தவிர்க்கும்) துன்பங்களை ஆராய்ந்து அவர்களை விரும்பாமல் விட்டுத் தொலை.
எப்படிப் பேசினால் எப்படி விழுவான், அவன் விழுவதால் தான் எப்படி சிறப்பாகவும் சீக்கிரமாகவும் பயன் அடையலாம் என்று ஆய்ந்து பேசும் பண்பு கெட்ட வரைவின் மகளிரிடம் வீழ்ந்து கிடக்காதே. அதனால், வரப்போகும் வீழ்ச்சிகளை ஆராய்ந்து அவர்களை விரும்பாமல் விட்டுத் தொலை.
இந்தக் குறளில் பல நயங்கள் இருக்கின்றன. மீண்டும், மீண்டும் படித்து மகிழ்க.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Komentarze