23/09/2023 (931)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கடல் இருக்கிறதே கடல் அது மட்டும் இல்லை என்றால் இந்தப் பூமிப் பந்து நெருப்புப் பந்தாகவே இருந்திருக்கும். கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளோம். தற்போது, கடல் மட்டம் உயர்கிறது என்று கவலை கொள்கிறார்கள். அது ஒரு இயற்கையின் சமன்பாடு. அது உயரவில்லை என்றால்தான் நாம் மிகவும் கவலைப் படவேண்டும்!
புவி வெப்பமயமாக்கலை நாம் செய்து கொண்டுள்ளோம். அதனைச் சமன்படுத்தக் கடல் தன்னை அதிகப்படுத்திக் கொள்கிறது. அவ்வளவே!
அதுபோன்று, மாந்த குலத்தில் ஒரு பக்கம் பலர் அழுத்தப்படுகிறார்கள். அதனைத் தங்கள் தாரள குணத்தால், பயன் எதனையும் எதிர்பாராமல் சிலர் சரி செய்து கொண்டுள்ளார்கள்.
பயன் எதனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்கு உதவி செய்கிறார் என்றால் அது பயக்கும் நன்மையை என்ன சொல்ல? அது இந்தப் பூமிப் பந்தினைக் காக்கும் கடலைவிடப் பெரிது என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார் நம் பேராசான்.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.” --- குறள் 103; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் = பயன் எதனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் சிலரின் செயல்களை ஆராய்ந்தால்; நன்மை கடலின் பெரிது = அது பயக்கும் நன்மையானது கடலினும் பெரிது.
பயன் எதனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் சிலரின் செயல்களை ஆராய்ந்தால் அது பயக்கும் நன்மையானது கடலினும் பெரிது.
அவர்கள் செய்யும் உதவி மற்றவர் பார்வையில் மிகச் சிறியதாக இருக்கலாம். “அது என்ன மாற்றத்தை நிகழ்த்தும்?” என்றுகூட எண்ணலாம். ஏகடியம் பேசலாம்! ஆனால், அதனால் பயனடைந்தோரைக் கேட்டால் அவர்கள் சொல்லக்கூடும்: அது வானுர ஓங்கி வளம் பெற உயர்ந்த பனையின் அளவு என்று!
இந்தக் குறளை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 05/04/2021 (78). மீள்பார்வைக்காக:
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”. --- குறள் – 104; அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios