top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பரிந்தோம்பி ... 132

14/10/2023 (952)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

காழ் என்றால் உறுதி. காழ்ப்பு என்றால் காரம், சாரம். காழ்ப்ப என்றால் மிகுதியாக.

காழி என்றால் நீடித்து நிற்பது. சீர்காழி என்றால் சிறப்பு மிக்க நீடித்து நிலைத்த நகர் என்று பொருள்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்தான் சீர்காழி. சீர்காழி பல பெயர்களால் வழங்கப்படுகிறது. கழு மல வளர் நகர், திருத்தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம் என்று குறிப்பதெல்லாம் சீர்காழியையே.


ஏழு கண்டங்களாக இருந்த இந்தப் பேரண்டத்தை ஒரு சமயம் கடல் பொங்கி அழித்ததாம். அப்போது, சீர்காழித்தலத்தையே தோணியாக்கிப் பல்லுயிர்களையும் அதனில் வைத்துக் காத்து இந்தப் பேரண்டம் மீளுருவாக்கம் செய்யப்பட்டதாம். ஆகையினால் இங்குள்ள இறைவன் தோணியப்பர் என்று வழங்கப் பெறுகிறார்.


இது போன்ற நிகழ்வு பல மதங்களிலும் குறிப்பிடப்படுகிறது. யுதப் பெருமக்களும், கிறுஸ்துவப் பெருமக்களும் நோவாவின் பேழை (Noah’s Ark) என்று அழைக்கிறார்கள். இதுவும் தோணியாகும். பெரும் வெள்ளப் பெருக்கம் ஏற்படப் போகின்றது என்ற கடவுளின் கட்டளையை அறிந்த நோவா என்ற இறைதூதர் ஒரு பெரும் தோணியின் மீது ஒரு பேழையச் செய்து அதனுள் அனைத்து வகை உயிரிணங்களையும் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்தார் என்கிறது விவிலியம்.


நூ (Nuh) என்னும் இஸ்லாமிய நபி பெருமானாரும் இதே போன்று உலகத்தை மீட்டுருவாக்கம் செய்ததாகத் திருக்குரானில் குறிப்பிடப்படுகின்றது.


இதில் இருந்து என்ன தெரிகின்றது என்றால் இந்த உலகம் அழியாமல் காக்கப் பட வேண்டுமென்றால் பல்லுயிர்களையும் பத்திரமாகப் பரிந்து பாதுக்காக்க வேண்டும். அல்லது, இதனை ஆராய்ந்து தெளிந்தாலும் அதுதான் ஒரே வழி.

இதுதான் குறிப்பு.


பரிந்து என்றால் அன்புடன் காக்க வேண்டும். இல்லை, இல்லை நான் உணர்ச்சிகளுக்கு ஆட்படாதவன். எனவே நான் அறிவின் துணைக் கொண்டுதான் தேடுவேன் என்றாலும் இது ஒன்றே வழி என்று தெரியவரும்.


மாணிக்கவாசகப் பெருமான் அருளியவை எட்டாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. அதில் “பிடித்தப் பத்து” என்னும் திருப்பதிகம் திருத்தோணிப்புரத்தில் அருளியது. அதில், தாயனாவள் குழந்தையின் தேவை அறிந்து அன்புடன் பால் ஊட்டுவாள். அவளினும் அன்புடையவன், பரிவானவன் இறைவன் என்கிறார் நம் மாணிக்க வாசகப் பெருமான்.


பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.”

--- பிடித்தப் பத்து, மாணிக்க வாசகப் பெருமான்.


சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? அதாங்க, “பரிந்து” என்ற சொல்லைக் கவனித்தில் வையுங்கள்.


அஃதாவது, நம் பேராசான் என்ன சொல்கின்றார் என்றால் “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதால் ஒழுக்கத்தை பரிந்துக் காக்க வேண்டும்.

இல்லை, இல்லை நான் அறிவின் வழி செல்பவன் என்றாலும் அப்போதும் முடிவில் ஒழுக்கமே என்று கண்டறிந்து ஒழுக்கம்தான் ஒருவர்க்குத் துணை என்று முடிவாகும் என்கிறார்.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.” --- குறள் 132; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


பரிந்து = விரும்பி, வருந்தி; ஓம்பி = பேணி; ஒழுக்கம் காக்க = ஒழுக்கத்தைக் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை = அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கண்டு அறிந்தாலும் ஒழுக்கம்தான் துணை என்று முடிவாகும்.


அஃதாவது, அவரவர்க்கு விதித்த ஒழுக்கத்தை விரும்பித் தளராமல் காக்க. இல்லையென்றால், அனுபவம் அந்த அறிவை உங்களுக்கு கொடுக்கும்!


“தீ சுடும்” என்றால் புரிந்துக் கொள்ள வேண்டும்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.








Comments


Post: Blog2_Post
bottom of page