24/02/2023 (722)
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தான் யானைகள் பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன.
2013 ஆம் ஆண்டு கென்ய நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆகழ்வாராய்ச்சியில் (Koobi Fora Research Project) யானையின் எச்சங்கள் (fossil) அதாவது மண்டை ஓடு (cranium) கண்டெடுக்கப்பட்டது.
அதைக் கொண்டு ஆராய்ந்ததில். அதன் உயரம் 12லிருந்து 13 அடி என்றும், அதன் எடை 8000 கிலோ கிராமாக இருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள். மேலும் அதன் காலம் 35 இலட்சம் ஆண்டுகளாக, இந்தப் பூமிப்பந்தில் இருக்கலாம் என்கிறார்கள்.
தற்போதைய யானைகளின் சராசரி எடை 3000 கிலோவாக இருக்கலாம். யானையானது உயரத்திலும், உருவத்திலும் ஒரு பெரிய விலங்கு!
அடுத்து புலிகள்: புலியானது யானையுடன் ஒப்பிட்டால் சிறிய விலங்கு. அதன் சராசரி எடை 300 கிலோவாக இருக்கலாம். அதாவது, யானையுடன் ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்கு! உயரமும் மிக குறைவு.
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு?
நம் பேராசான்தான் ஒப்பிடச் சொல்கிறார்!
யானையைப் பார், புலியுடன் ஒப்பிடும் போது, அது எவ்வளவு பெரியது. அது மட்டுமல்ல கூரிய, வளைந்த தந்தங்களை உடையது. இருந்தாலும், புலியானது தாக்கவரும் போது யானையானது அஞ்சும்!
“பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.” --- குறள் 599; அதிகாரம் – ஊக்கம் உடைமை
புலிதாக்குறின் = புலி தாக்கினால்;
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் = பருத்த உருவம், கூரிய வளைந்த தந்தங்களை உடையதாக யானை இருந்தாலும் அஞ்சும்.
வென்றுவிட வேண்டும் என்று புலி தாக்கினால், பருத்த உருவம், கூரிய வளைந்த தந்தங்களை உடையதாக யானை இருந்தாலும் அஞ்சும்.
உருவு அல்ல முக்கியம்; ஊக்கம்தான் அனைத்தும்!
கொசுறு தகவல்: ஆண் யானைகளுக்கு மட்டும் தான் தந்தம் (tusk) என்று நினைத்திருந்தால், ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கும் தந்தம் இருக்குமாம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments