01/02/2024 (1062)
அன்பிற்கினியவர்களுக்கு:
நிலையாமையைக் குறித்து நம் பேராசான் முதலில் சொன்னது என்னவென்றால் ஆக்கிய பொருள்கள் அழியும். மயக்கத்தினால் பொருள்கள் என்றும் நிலைத்து இருக்கும் என்று அவற்றின்மேல் காதல் கொள்வது புல்லறிவிலும் புல்லறிவு என்றார். காண்க 20/01/2024. மீள்பார்வைக்காக:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. – 331; - நிலையாமை
துறவு என்னும் அதிகாரத்தில்: பற்றுகளை விட்டால் அமைதிகிட்டும்; இவ் உலகைவிட்டு அமைதியாக நீங்கலாம்; இல்லையென்றால் நிலையாமையில் சொன்ன அந்தப் புல்லறிவின் ஆட்சியிலேதான் இருக்கிறீர்கள் என்று பொருள் என்கிறார்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். – 349; துறவு
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் = பற்றுகளை விட்டால் அமைதி கிட்டும். இவ் உலகைவிட்டு அமைதியாக நீங்கலாம்; மற்று = இல்லையென்றால்; நிலையாமை காணப்படும் = பொருள்களின் நிலையாமையால் மனம் வாடி, பல செயல்கள் செய்து, துன்பம் மிக உழல வேண்டியதுதான்.
பற்றுகளை விட்டால் அமைதி கிட்டும். இவ் உலகைவிட்டு அமைதியாக நீங்கலாம். இல்லையென்றால், பொருள்களின் நிலையாமையால் மனம் வாடி, பல செயல்கள் செய்து, துன்பம் மிக உழல வேண்டியதுதான்.
நம் பேராசானின் சொல்லாட்சி பொருள் பொதிந்தது. எந்தெந்தப் பற்றுகளை நீக்குகிறோமோ அந்த அந்தப் பற்றுகளால் வரும் துன்பம் நீங்கும் என்று சொன்ன குறளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் இரு உதடுகளும்கூட ஒட்டா.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். - 341; துறவு
துறவு அதிகாரத்தின் முடிவுரையாகப் பற்றின் பற்றைப் பற்றியப் பாடல் உதடுகளைச் சேர்க்காமல் ஒரு சீரையும் உச்சரிக்க முடியாது! ஒரு பற்றின் முக்கியத்துவத்தை உரைக்க வந்த குறள் இது.
பற்றுகளை விடுவதற்கு ஒரு பற்றினை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டுமாம்!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – 350; - துறவு
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக = பற்றுகளை முற்றும் துறந்தவர்களின் மேல் கொண்ட பற்றினைப் பற்றுக; பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக = உங்களின் யான் எனது என்னும் பற்றுகளை விடுவதற்கு அந்தப் பற்றினை எப்போதும் விடாமல் பற்றுக.
பற்றுகளை முற்றும் துறந்தவர்களின் மேல் கொண்ட பற்றினைப் பற்றுக. உங்களின் யான்- எனது என்னும் பற்றுகளை விடுவதற்கு, அந்தப் பற்றினை எப்போதும் விடாமல் பற்றுக.
அஃதாவது, பத்திரகிரியார் எப்படிப் பட்டிணத்தடிகளைப் “பற்றி” ஞானம் பெற்றாரோ அவ்வாறு. உங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியை வைத்துக் கொள்ளுங்கள். அது நேரடித் தொடர்பில்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
பாரசீக பெருங்கவிஞர் ஜலாலுதீன் முகம்மது ரூமியின் வார்த்தைகளில்
தாகித்தவன் தண்ணிரைக் காண்பான்;
தண்ணிரும் தாகித்தவனைத் தேடுவது போல …
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Bình luận