31/01/2024 (1061)
அன்பிற்கினியவர்களுக்கு:
துடுப்புக் கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள் …
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் …
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உடம்பு என்பது பொய்தானே … கவிப்பேரரசு வைரமுத்து, நீங்கள் கேட்டவை, 1984
உடம்பே பாரம் என்று நினைக்க வேண்டிய நிலையில் பற்றுகள் ஏன் என்றார் குறள் 345 இல். காண்க 30/01/2024.
யான் என்ற அகப்பற்றினையும், எனது என்ற புறப்பற்றினையுமாகிய இரு பற்றுகளையும் அறுத்துவிட்டால் வான்புகழ் கொண்டவர்களுக்குரிய உயர்ந்த புகழ் உலகத்தில் நிலைக்கலாம் என்றார் குறள் 346 இல். காண்க 29/01/2024.
பற்றினை விடாதவர்க்குப் பற்றி விடா இடும்பைகள் என்று ஒசை நயத்துடன் சொல்கிறார். அஃதாவது, ஆசைகளையும் (எனது என்னும் புறப்பற்று) ஆணவத்தையும் (யான் என்னும் அகப்பற்று) இறுகப் பற்றிக் கொண்டு விடாதவர்க்குத் துன்பங்கள் எப்போதும் அவர்களைப் பற்றிக் கொண்டு விடாதாம்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. – 347; - துறவு
பற்றினைப் பற்றி விடாதவர்க்கு = யான், எனது என்ற இருவகையான பற்றுகளையும் பற்றிக் கொண்டு விடாதவர்க்கு; இடும்பைகள் பற்றி விடா = துன்பங்கள் அவர்களைப் பற்றிக் கொண்டு விடா.
யான், எனது என்ற இருவகையான பற்றுகளையும் பற்றிக் கொண்டு விடாதவர்க்குத் துன்பங்கள் அவர்களைப் பற்றிக் கொண்டு விடா.
மீண்டும் ஆசைகள் என்னும் வலையில் மயங்கி சிக்கிக் கொள்ளாதீர்கள் என்கிறார்.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். – 348; துறவு
தீரத் துறந்தார் தலைப்பட்டார் = பற்றுகளை முற்றும் துறந்தார் அமைதி பெற்றார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் = ஏனையவர் மயக்கத்தில் ஆழ்ந்து பற்றுகள் என்னும் வலையில் அகப்பட்டார்.
பற்றுகளை முற்றும் துறந்தார் அமைதி பெற்றார். ஏனையவர் மயக்கத்தில் ஆழ்ந்து பற்றுகள் என்னும் வலையில் அகப்பட்டார்.
வாழ்வின் இறுதிக் காலம் அமைதியாகக் கழியவேண்டுமா, பற்றுகளை விடுங்கள் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires