09/06/2023 (827)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நம் பேராசான் ‘பயம்’ என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார். மூன்று இடங்களிலும் ‘பயன்’ என்ற பொருளிலேயே கையாண்டுள்ளார்.
‘பயன்’ என்ற சொல்லை முப்பத்தொன்பது இடங்களில் பயன்படுத்தியுள்ளார் என்று கணக்கிடுகிறார்கள்.
‘பயந்து’ என்ற சொல்லையும் பயனைத் தந்து என்ற பொருளில் ஒரு குறளில் சொல்லியிருக்கிறார்.
பயக்கும், பயத்ததோ, பயத்தலான், பயத்தவோ, பயந்து, பயப்பது, பயப்பினும், பயப்பது, பயம், பயவா, பயன்படும், பயன்படுவர், பயனும் ... இதெல்லாம் நம் பேராசான் பயன்படுத்தியச் சொல்கள். எல்லாம் பயன் கருதியே!
ஆக, நம் பேராசானுக்கு, பயம் என்பதே இல்லை போலும். அதாவது, நாம், தற்போது, அச்சம் என்ற பொருளில் பயன்படுத்தும் பயம் என்பது இல்லை!
பயம் என்ற சொல் சங்க கால இலக்கியங்களிலும் ‘பயன்’ என்பதைக் குறிக்கவே பயன்பட்டுள்ளது.
சங்க காலப் பாடல்களில் ‘பத்துப்பாட்டு’ என்னும் தொகையில் ஒரு நூல் பெரும்பாணாற்றுப் படை. அதன் 67 ஆவது அடியில்:
...
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் ...
பொருள்: மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும் ஆகச் சிறந்த பயனைக் கொடுக்கும் ...
பத்துப்பாட்டுத் தொகையில் உள்ள மலைபடுகடாத்தில் 47 ஆவது வரியில்:
...
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் ...
பொருள்: ... குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில் ...
இப்படி, சங்க காலத்தில் பயம் என்பது பயன் என்றே பயின்று வந்துள்ளது. அது எப்போது அச்சம் என்ற பொருளில் திரிந்தது என்பது ஆராயத்தக்கது. இது நிற்க.
நாம் குறளுக்கு வருவோம்.
“பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.” --- குறள் 728; அதிகாரம் – அவையஞ்சாமை
நல் அவை = சிறந்த அறிஞர் பெருமக்கள் கூடியுள்ள அவை; நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் = அறிஞர்கள் அவையில் அவர்கள் ஏற்கும்வகையில் சொல்ல அஞ்சுபவர்கள்; பல்லவை = பலவற்றை, பல நூல்களை; கற்றும் பயமிலரே = பயின்று இருப்பினும் எந்தப் பயனும் இல்லாதவரே.
அறிஞர்கள் அவையில் அவர்கள் ஏற்கும்வகையில் சொல்ல அஞ்சுபவர்கள், பல நூல்களைப் பயின்று இருப்பினும் எந்தப் பயனும் இல்லாதவரே.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments