01/08/2023 (880)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“இனம்போன்று இனம் அல்லார்” என்று சொல்லி இல்லறத்தில் துணையும் கூட கூடாநட்பாகும் என்றார் குறள் 822 இல்.
அதனை அடுத்து என்ன சொல்கின்றார் என்றால் நன்கு கற்றறிந்தவர்களும்கூட கூடா நட்பாகக் கூடும் என்கிறார். இவர்தான் மெத்தப் படித்தவர் ஆயிற்றே இவர் நல்ல நட்பாகத்தான் இருப்பார் என்பதும் தவறு என்கிறார்.
படித்தவன் தான் சூதும் பாவமும் செய்கிறான்!
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான், ஐயோவென்று போவான்! --- என்கிறார் மகாகவி பாரதி புதிய கோணாங்கி கவிதையில். காண்க 06/02/2022 (346), 23/08/2022 (542), 09/03/2023 (735).
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.” --- குறள் 823; அதிகாரம் – கூடாநட்பு
மாணார் = உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் பகைவர்;
மாணார்க்கு அரிது = மனம் வேறுபட்டு ஆனால் நமக்கு நண்பனைப் போல் தோற்றமளிக்கும் கூடா நட்பானது; நல்ல பல கற்றக் கடைத்தும் = நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றிருந்தாலும்; மனம் நல்லர் ஆகுதல் அரிது= மனம் செழுமை பெறுதல் இயலாதது.
மனம் வேறுபட்டு ஆனால் நமக்கு நண்பனைப் போல் தோற்றமளிக்கும் கூடா நட்பானது, நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றிருந்தாலும் அவர்களின் மனம் செழுமை பெறுதல் இயலாதது.
ஆதலால்கூடா நட்பென்பது எந்த உருவிலும் வரலாம். அதனை அறிந்து அதற்கேற்றார் போல் நம்மை நெறிப்படுத்திக் கொள்வதில் கவனம் வைக்கவேண்டும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments