09/04/2023 (766)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்.
அமைச்சு அதிகாரத்தின் முதல் ஐந்து பாடல்களில் அமைச்சனின் குணங்களைக் கூறினார். ஆறாம் பாடலில் அவர்தம் சிறப்பு கூறினார். ஏழு, எட்டாம் பாடல்களில் அவர்களின் செயல்வகையை எடுத்துரைத்தார். அடுத்து வரும் இரு பாடல்கள் மூலம் யாரை அமைச்சனாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்.
கூட இருந்து குழி பறிப்பவர்களை, பக்கத்தில் இருந்தே நமக்கு பள்ளம் வெட்டுபவர்களை அமைச்சர்களாக, ஆலோசகர்களாக வைத்துக் கொள்ளக் கூடாதம். இது முதல் குறிப்பு.
அந்த மாதிரி ஆட்கள் ஒவ்வொருவரும் எழுபது கோடி பகைவர்களுக்குச் சமமாம்!
அது என்ன எழுபது கோடி?
அதாவது, எண்ணிலடங்காப் பகைவர்களைக் குறிக்கும். (ஒரு வேளை நம் பேராசான், இந்தப் பாடலை எழுதும்போது உலக மக்கள் தொகையே அவ்வளவுதானா?)
“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.” --- குறள் 639; அதிகாரம் – அமைச்சு
தெவ்வர் = பகைவர்
பக்கத்துள் பழுதெண்ணும் மந்திரியின் = நம்ம பக்கத்தில் இருந்து கொண்டு நமக்குத் தீங்கு நினைக்கும் மந்திரி ஒருவன் எனினும்;
தெவ்வோர் எழுபது கோடி உறும் = (அவன்) ஒரு எழுபது கோடி பகைவர்களுக்குச் சமம்.
நம்ம பக்கத்தில் இருந்து கொண்டு நமக்குத் தீங்கு நினைக்கும் மந்திரி ஒருவன் எனினும், அவன் ஒரு எழுபது கோடி பகைவர்களுக்குச் சமம்.
அவரைத் தவிர்த்தல் நன்று.
இரண்டாம் குறிப்பு என்னவென்றால், “எல்லாம் சொல்லுமாம் பல்லி; கழனிப் பானையிலே விழுமாம் துள்ளி” என்ற வகையில் இருக்கும் அமைச்சர்கள்.
“முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.” --- குறள் 640; அதிகாரம் – அமைச்சு
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் = செய்யப் போகும் செயல்களை நன்றாக ஆராய்ந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துச் சொல்வார்களாம், இருப்பினும், அச் செயலைச் செய்யும்போது, முடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பார்களாம்;
திறப்பாடு இலாதவர் = முடித்தற்கு வேண்டிய திறமை இல்லாதவர்கள்
செய்யப் போகும் செயல்களை நன்றாக ஆராய்ந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துச் சொல்வார்களாம். இருப்பினும், அச் செயலைச் செய்யும்போது, முடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பார்களாம், முடித்தற்கு வேண்டிய திறமை இல்லாதவர்கள்!
அதாவது, அமைச்சர்கள், ஆய்ந்து, அறிந்து சொல்பவர்களாக இருந்தால் மட்டும் போதாது. செயல் விரர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களைத் தவிர்க்க வேண்டும்.
பக்கத்தில் இருந்தே கெடுப்பவர்களையும், செயல் திறமை இல்லாதவர்களையும் தவிர்த்தல் நன்று என்று இந்த இரண்டு பாடல்கள் மூலம் குறிப்பிட்டு அமைச்சு அதிகாரத்தை நிறைவு செய்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments