21/10/2021 (240)
தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர் ஆயிட்டோம். நாம செய்வதையெல்லாம் தலைமை அங்கிகரிக்குது. நமக்கு ஏதாவது சிக்கல் வந்தா தலைமை தவறாமல் நம்மைக் காப்பாற்றும். அது உறுதின்னு நினைத்துக் கொண்டு எது வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டு தகாதனவைகளைச் செய்யக் கூடாதாம். ஏன் என்றால், தலைமையின் நம்பிக்கை எந்த நேரத்திலும் மாறக்கூடியது என்ற கவனம் இருக்கனுமாம்.
நம்பிக்கை போயிடுச்சுனா எல்லாம் போயிடும். தலைமைக்கு தனி ஒருவரைக் காப்பாற்றுவதைவிட கூட்டுப் பொறுப்பு ரொம்ப முக்கியமாக இருக்கும். இது எப்பவும் மாறாது.
நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால் எதுவும் தப்பு கிடையாதுன்னு தலைமை நினைக்கும். இது எப்பவும் தலைமையோட நெருங்கி பழகுபவர்களுக்கு கவனத்தில் இருக்கனும்.
நாம இப்போ குறளுக்கு போவோம்.
“கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.” --- குறள் 699; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் =தலைமை நம்மை நம்பிவிட்து என்று எண்ணி தம் மனம் போனவாறு செய்யமாட்டார்கள்; துளக்கு = மாற்றம்; துளக்கு அற்ற காட்சியவர் = மாறாத விதியை அறிந்தவர்கள்.
அது என்ன மாறாத விதி?
தலைமைக்கு களங்கம் வரும் செயல்களை ஒரு வேளை செய்தால் அது தனக்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது வரலாற்று உண்மை. இதுதான் மாறாத விதி. இதை உனர்ந்தவர்கள் தவறியும் செய்யமாட்டார்கள் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
அடுத்த குறள் இந்த அதிகாரத்தின் கடைசி குறள். அதிலே இன்னும் தெளிவாக சொல்லி முடிக்கிறார் நம் பேராசான்.
தலைமையோட இன்று நேற்றல்ல பல காலத்து பழக்கம். தலைமைக்கு வருவதற்கு முன்னாடியே எனக்கு அவரோடு புழக்கம். அதனாலே, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தலைமை கண்டு கொள்ளாது என்று காரியங்களைச் செய்தால் அந்தச் செயல்கள் கேடு தரும் என்கிறார்.
“பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.” --- குறள் 700; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
பழையம் எனக்கருதி= நீண்ட கால நட்பு என்று எண்ணிக் கொண்டு; பண்பல்ல செய்யும் = செய்யக் கூடாததைச் செய்யும்; கெழுதகைமை = நட்பினால் வரும் உரிமை; கேடு தரும் = கேட்டினையே தரும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments