08/07/2022 (497)
சூதினால் இல்லாகியார் ஆவார்கள். அதாவது, வறுமை வரும். அகடு ஆரார், அதாவது வயிறு எனும் பள்ளம் நிரம்பாது பசியிலும், மேலும் பல துன்பங்களிலும் உழல்வர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார் நம் பேராசான்.
“பொருளது சேர வேண்டும், அதை காத்து ரட்சிக்க வேண்டும்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, ஒருவருக்கு, அறத்தின் வழி, பொருள் சேர வேண்டும். அது செழுமையின் அடையாளம். சேர்ந்த அந்தப் பொருளை காத்து போற்ற வேண்டும். அந்த செழுமையால், அவர்களுக்கு சில பழக்க வழக்கங்கள் ஏற்பட்டிருக்கும். நல்ல உடை உடுத்துவது முதலான பலவற்றை பழகியிருப்பார்கள். மேலும், சிலர் நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படியெல்லாம், வழி, வழியாக வந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள், ஏதோ ஒரு காரணத்தால், சூதினால் ஈர்க்கப்பட்டு சூதாடும் களத்திற்கு செல்வார்களானால், அது வரை அவர்கள் பழகிய செல்வமும், நற்பண்புகளும் அவர்களை விட்டு போய்விடுமாம்.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.” --- குறள் 937; அதிகாரம் – சூது
கழகத்துக் காலை புகின் = சூதாடும் களத்திற்குள் புகுவார்களானால்;
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் = வழி, வழியாக வந்த செல்வமும், நற்பண்புகளும் விலகும்.
“காலை புகின்” என்பதற்கு காலை நேரமே சென்றால் என்றும் சில அறிஞர் பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள்.
காலை நேரம் நல்ல பல செயல்பாடுகளுக்கு உரிய நேரம். அந்த நேரத்திலும் சூது விளையாடினால் என்றும், சில பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள்.
“கழகத்துக்காலை புகின்” என்பதற்கு சூதாடும் களம் திறந்திருக்கும் காலம் முழுவதும், அதாவது, எப்போதும் அங்கேயே விழுந்துகிடந்தால் என்றும் சில ஆசிரியப் பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள்.
எவ்வாறு பொருள் கண்டாலும், பழகிய செல்வமும், பண்பும் இல்லாமல் போகும் என்பது உறுதி என்றார் என் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments