24/12/2021 (304)
குந்தி தேவியார் கர்ணன் தன் பிள்ளைதான் என அறிந்து கர்ணனிடம் சென்று தன்னுடன் வருமாறு அழைக்கும் காட்சி. அதற்கு கர்ணனின் பதில்.
“அம்மா, அம்மா, நான் ஒரு முறை என் நண்பன் துரியோதனனின் மனைவியுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தேன் அவளின் அந்தப்புரத்தினிலே.
அவள் வாசலை நோக்கி அமர்ந்திருக்க எனது முதுகுப் பகுதி வாசலை நோக்கியிருந்தது. ஆட்டம் மும்முரமாக இருந்தது. ஆட்டத்தில் எனக்கு வெற்றி வரும் தருணம். அப்போது, அவசரமாக பானுமதி எழுந்தாள். தன் தோல்வியைத் தவிர்க்கத்தான் அவள் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி, அம்மா செய்யத்தகாத செயலைச் செய்தேன். ஆடை நெகிழாமல் இருக்க அவள் இடுப்பில் அணிந்து இருந்த மேகலையைப் பிடித்து இழுத்து அவளை உட்கார வைக்க முயன்றேன்.
அம்மா, அந்த மேகலை அறுந்து, அதில் இருந்த முத்துக்கள் சிதறின. என் செயலை நினைந்து குறுகிப் போனேன். துரியோதனன் என்ன நினைப்பான் என்று மறுகிப்போனேன் அப்போது பின்னால் இருந்து ‘சிதறிய முத்துக்களை எடுக்கவோ, கோக்கவோ’ என்று என் நண்பனின் குரல். அவன் பின்னால் இருப்பதை நான் அறியவில்லை. அவன் ‘எடுக்கவோ, கோக்கவோ’ என்று மட்டும் கேட்காமல் அந்த முத்துக்களை ஒவ்வொன்றாக நிதானம் தவறாமல் எடுத்தான் அம்மா. சஞ்சலப் படவில்லை அம்மா அவன் மனம்.
இது நாள்வரை அது குறித்து ஒரு சொல், ஒரு சொல் என்னைக் கேட்டதில்லை. அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு உரிமையைத் தந்து இருக்கிறான் அம்மா. அவனை விட்டு விலகுவதும் என்னை விட்டு உயிர் விலகுவதும் ஒன்றே. வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கள் அம்மா …”
'மடந்தை பொன்திரு மேகலை மணி உகவே, மாசு அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப,"எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்;
திடம் படுத்திடுவேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான்.
--- வில்லிப்புத்தூரார்; 255 வில்லி பாரதம்
சரி, எதற்கு இந்த பாரதம் இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கு. நம் வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால், நண்பன் உரிமையில் செய்ததை தான் செய்ததைப் போலவே ஏற்றுக் கொள்ளாவிட்டால், பழகிய நட்பினால் என்ன பயன்? என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறார்.
“பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.” --- குறள் 803; அதிகாரம் – பழைமை
கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை = உரிமையால் நண்பன் செய்ததை தான் செய்ததுபோல உடன்படா விட்டால்; பழகிய நட்பு எவன் செய்யும் = அந்த நீண்ட கால நட்புக்கு பயன்தான் என்ன?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments