27/09/2021 (216)
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்று எச்சரித்து இருந்தார் நம் வள்ளுவப் பெருந்தகை. அதுதான் கூடாநட்பு.
கூடா நட்பாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நேற்று உறங்கி விட்டேன்.
கனவிலே வள்ளுவப் பெருமான். தம்பி என்றழைத்தார். என்ன கேள்வி உனக்கு என்றார்.
கூடா நட்பை விலக்குவது எப்படி என்றேன்.
அதற்கு நீ இரண்டு காரியம் செய்ய வேண்டும் என்றார்.
அது என்ன ஐயனே?
சிரிக்க வேண்டுமாம்! பின் சாகடிக்க வேண்டுமாம்! பார்த்தீர்களா? என்ன ஒரு வில்லத்தனம்!
ஆமாங்க, அப்படித்தான் சொன்னார் நம் பேராசான்.
கொஞ்சம் கிட்ட வான்னு கூப்பிட்டு, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று செய்வது தப்புதான் என்றாலும் நம்மை அழிக்கும் பகைவரிடம் அது தப்பில்லை, புரிஞ்சுதான்னு கேட்டார். குறள் 829ல் சொல்லி இருக்கேன் அதைப் பாரு என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனக்கு ஒரே கலக்கம்.
வள்ளுவப் பெருமானா இப்படி?
அவரா சொன்னார்? இருக்காது.
அப்படி எதுவும் நடக்காது; நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை …
உடனே விழிப்புவர, குறளை எடுத்தேன், படித்தேன். இருந்தாலும் நம் பேராசானுக்கு இவ்வளவு கூடாது.
நம்மிடம் சிரித்துப் பேசி நாம் இல்லாத போது இகழ்வதுமாக இருக்கும் பகைவரிடம் நாமும் சிரித்துப் பேச வேண்டுமாம்!
அதே சமயம், அந்த நட்பினைச் சாகடிக்க என்ன, என்ன உண்டோ அதையெல்லாம் சத்தம் போடாமல் செய்ய வேண்டுமாம்!
அதைத்தான் அப்படிச் சொல்லி மறைந்திருக்கிறார்.
“மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.” --- குறள் 829; அதிகாரம் – கூடா நட்பு
மிகச்செய்து தம் எள்ளுவாரை = (பகை தெரியாமல் இருக்க நம்மிடம்) மிகவும் நட்பு பாராட்டி பின் நம்மை இகழ்ந்து பேசுவாரை; நகச்செய்து = நாமும் அதேபோல் அவர்கள் முன் நன்றாக சிரித்து நட்பு செய்து; நட்பினுள் சாப்புல்லற் பாற்று = அந்த நட்பினை (வெளியெ தெரியாமல்) உள்ளேயே சாகடிக்க வேண்டும்; சா புல்லல்= சாவினைத் தழுவுதல்; பாற்று = தக்கது
கூடாநட்பானால் அவர்களிடமும் சிரிப்போம், அந்த நட்பை மெல்லச் சாகடிப்போம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Yorumlar