top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மிகச்செய்து பகைநட்பாங் தொழுதகை ... 829, 828, 830

05/08/2023 (884)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஆளை மயக்கும் பணிவான பேச்சுகளிலும் செயல்களிலும் நம்மை வீழ்த்தும் கூடா நட்பு.


இது மட்டுமல்ல! அவர்கள் நம்மைக் கையைக் கூப்பியும் தொழுவார்களாம். கண்ணில் நீரைத் தேக்கியும் அழுவார்களாம்! ஆனால், அவர்கள் அந்த நடிப்பினில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பார்களாம்!


இந்தக் குறளை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 26/09/2021 (215), 09/05/2022 (437), 11/02/2023 (709). மீள்பார்வைக்காக:


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.” --- குறள் 828; அதிகாரம் – கூடா நட்பு


சரி, கூடா நட்பென்று தெரிந்து விட்டது. இப்போது என்ன செய்யலாம்? என்ற கேள்விக்கு நம் பேராசானின் பதில் சற்று வித்தியாசமானது. முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும் என்று கேட்கிறார்! இந்தப் பாடலையும் நாம் முன்பு ஒரு முறை சிந்தி த் துள்ளோம். காண்க 27/09/2021 (216). மீள் பார்வைக்காக:


“மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று.” --- குறள் 829; அதிகாரம் – கூடா நட்பு


பகையை மறைத்து நம்மிடம் மிகவும் நட்பு பாராட்டி பின் நம்மை இகழ்ந்து பேசுவாரை நாமும் அதேபோல் அவர்கள் முன் நன்றாக சிரித்து நட்பு செய்து அந்த நட்பினை (வெளியெ தெரியாமல்) உள்ளேயே சாகடிக்க வேண்டும்.


ரொம்பவே நுணுக்கமானக் குறள் இது.


சரி, இப்போது கூடாநட்பிற்கு முடிவுரையாக, அதற்கு முடிவான ஒரு தீர்வாக ஒரு பாடலைச் சொல்கிறார்.


‘நகச் செய்து’ பின்னர் விட்டுவிடு என்று முன்னர் சொன்னவர், அந்தக் கதை, இந்தக் கதையெல்லாம் என்னத்துக்கு தம்பி. அவனைப் பார்த்தியா சிரிச்சியா, இரண்டு வார்த்தை பேசினியா அங்கிருந்து நகர்ந்துடு. அப்புறம், அவன் பக்கம் தலைவைத்துகூட படுக்க நினைக்காதே. அவனுக்காக நேரம் செலவு செய்வது வீண் என்கிறார்.


பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்

டகநட் பொரீஇ விடல்.” --- குறள் 830; அதிகாரம் – கூடா நட்பு



ஒரீஇ = விலக்கி, ஒழித்து, தவிர்த்து, தப்பித்து; ஒரீஇ என்பது ஒருவி என்பதன் விகாரம்;

பகை நட்பாம் காலம் வருங்கால் = கூடா நட்பைச் சந்திக்கும் காலம் ஒரு வேளை வந்துவிடுமானால்; முகம் நட்டு = முகத்தினில் நட்பைக் காட்டி; அக நட்பு ஒரீஇ விடல் = உள்ளுக்குள் அந்த நட்பை வைக்காமல் அந்தக் கூடா நட்பை அப்போதே துண்டித்துவிடு.


கூடா நட்பைச் சந்திக்கும் காலம், ஒரு வேளை வந்துவிடுமானால், முகத்தினில் நட்பைக் காட்டி, உள்ளுக்குள் அந்த நட்பை வைக்காமல், அந்தக் கூடா நட்பை அப்போதே துண்டித்துவிடு.


நகர்ந்துவிடு தம்பி! உனக்கு எவ்வளவோ வேலை இருக்கு. அதைப் பாரு.

அவன் பாதையில் அவன் நடக்கட்டும்!


இந்தக் கருத்தைச் சொல்லி கூடா நட்பை முடித்து வைக்கிறார்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comentarios


Post: Blog2_Post
bottom of page