05/06/2022 (464)
இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்:
1. “மோகத்தைக் கொன்று விடு அல்லால் என்தன் மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு; … மகாகவி பாரதி
2. “மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்…
மனதில் உனது ஆதிக்கம்; இளமையின் அழகு உயிரை பாதிக்கும்;
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்;
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி ஆணிவேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி …” --- கவிஞர் வைரமுத்து, சிந்துபைரவி என்ற திரைப்படத்தில்.
இப்போது நாம் சொல்கிறோமே, அந்த மோகத்திலே, காம மயக்கத்திலே மகாகவி பாரதி பாதிக்கப்பட்டு இருந்தாரா?
“மோகத்தைக் கொன்று விடு” என்றால் என்ன பொருள்? இதனை எதற்காக மகாகவி எழுதினார்? யாரிடம் பேசிக் கொண்டுள்ளார்?
இந்த இரு பாடல்களின் கருத்தும் ஒன்றா? ‘மோகம்’ என்ற சொல்தான் இந்த இரண்டு பாடல்களையும் இணைப்பது. ஆனால், இரண்டும் முற்றிலும் வேறான கருத்துகளை உள்ளடக்கியது. இரண்டாவது பாடலில் கவிஞர் வைரமுத்து, ‘விரகம்’ என்று தெளிவுபடுத்திவிட்டார்.
மகாகவி, மகாசக்திக்கு விண்ணப்பம் என்ற தலைப்பிலே எழுதியுள்ளப் பாடல் அது. இங்கே, மோகம் என்பது ‘பற்று’ இல்லை என்றால் ‘பந்தம்’ என்று பொருள். இதையும் மகாகவி தெளிவு படுத்துகிறார் அதே பாடலில்.
“…பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு – அல்லால் இதைச் செத்த உடலாக்கு …” என்கிறார்.
சரி, இந்த தத்துவ விசாரம் எதற்காக இப்போது என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கின்றது!
ஆண் வர்க்கம் எப்போதும் பெண் வர்க்கத்தின் பேச்சைக் கேட்டே, குழந்தைப் பருவத்தில் இருந்து, வளர்கின்றது. அதனால், பெண்களிடம் ஒரு பற்று எப்போதும் ஆண் வர்க்கத்திற்கு இருப்பது இயற்கை. அந்தப் பற்றுக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. எந்தப் பற்றும், அதிதப் பற்று ஆகிவிட்டால் அந்தப் பற்று நம்மை ஆட்டி வைக்கும்.
தலைமேல் ஏற்றிக் கொண்டு ஆடும் எல்லாப் ‘பெண் ஏவல்’களுக்கும், காம மயக்கம் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது, அதீதப் பற்றாகக் கூட இருக்கலாம். அதனால், ஆண்கள் அறமல்லாதன செய்யலாம். அது, மனையாளிடம் இருந்துதான் ஆரம்பிக்கும் என்பதும் சரியான ஒரு புரிதலாக இருக்காது.
வள்ளுவப் பெருமான் சொல்லும் “பெண்வழிச் சேறல்” என்பதை, நான் அவ்வாறுதான் புரிந்து கொள்கிறேன். அறமல்லாத செயல்கள், தேவையற்ற, அளவுக்கு அதிகமாகமாக வைக்கும் பற்றினால் நிகழ்வது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு விரகமும் ஒரு காரனமாக இருக்கலாம் அவ்வளவுதான்.
அதனால்தான், இந்தப் பெண் வழிச்சேறலில் சொல்லப்படுபவர்கள் யார், யார் என்று அனுபவத்தில்தான் கண்டு உணர வேண்டும்.
காலத்தின் அருமை கருதி நிறைவு செய்கிறேன். குறளுடன் நாளை சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments