02/08/2023 (881)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கூடா நட்பு என்பது நாம் எதிர் பார்க்காத இடத்திலெல்லாம் இருக்கக்கூடும், கன்னி வெடிகளைப் போல!
பார்த்த உடன் தெரியாது. நம் இனம் போலவே இருக்கும். ஆனால் இருக்காது! வாய்ப்பு கிடைக்கும்போது தாக்கித் தகர்க்கும் என்றார் குறள் 821 இல்.
அதற்கு எடுத்துக் கொண்ட முதல் உதாரணமானது, இல்லறத்தில் இணைகூட கூடா நட்பாகலாம் என்றார் (குறள் 822). அதனை அடுத்து, குறள் 823 இல், மெத்தக் கற்றிருந்தாலும் அவர்கள்கூட கீழறுக்கலாம் என்றார். படித்தவர்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமல்ல என்றார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இது பெரும்பான்மை!
நம் பேராசான், குறிப்பறிதல் அதிகாரத்தில் பெரும்பான்மையின் இலக்கணத்தைச் சொன்னார். காண்க 28/10/2021 (247). மீள்பார்வைக்காக:
“முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.” ---குறள் 707; அதிகாரம் – குறிப்பறிதல்
முகத்தைவிட அறிவு மிக்கதுன்னு எதாவது இருக்கா என்ன? மனம் மகிழ்ந்தாலும் அமிழ்ந்தாலும் முகம் முந்திக் கொண்டு காட்டிக் கொடுத்துவிடும்.
எதற்கும் விதிவிலக்குகள் இருக்கத் தானே செய்யும். எனவே, அந்த விதி விலக்கினை கூடா நட்பிற்கான குறிப்பாகச் சொல்கிறார்.
சிலரின் மனக்கோணல்களை நம்மால் அவ்வளவு எளிதாக அவர்களின் முகக் குறிப்புகளைக் கொண்டு அறிந்திடல் முடியாது. அரிதாரமிட்டு அழகாகக் காண்பிப்பார்கள்.
“... சிரிப்பது போலே முகமிருக்கும்...
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும் ...” --- பஞ்சு அருணாசலம்; திரைப்படம் – காயத்ரி (1977)
ஆமாம், முகத்தில் உள்ள இனிமையைக் கண்டு மயங்கிவிடாதே என்கிறார். இதுதான் அடுத்தக் குறிப்பு.
“முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.” --- குறள் 824; அதிகாரம் – கூடா நட்பு
நகாஅ = நக்கு = சிரித்து; முகத்தின் இனிய நகாஅ = முகத்தில் இனிய புன்னகையை உதிர்த்துக் கொண்டு; அகத்து இன்னா = அகத்தில், அதாவது உள்ளுக்குள் வஞ்சகச் செயல்களை எண்ணிக் கொண்டிருக்கும்; வஞ்சரை அஞ்சப்படும் = வஞ்சகர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்.
முகத்தில் இனிய புன்னகையை உதிர்த்துக் கொண்டு அகத்தில் அதாவது உள்ளுக்குள் வஞ்சகச் செயல்களை எண்ணிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments