12/05/2023 (799)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சென்றதுபோக நின்றது எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டுமாம்!
ஓரு வினையைத் தொடங்கினால் அதை முடிக்கும் வகையும், அவ்வாறு அந்த வினை செய்து கொண்டிருக்கும்போது வரும் இடையூறுகளையும், அவ்வினை முடிந்தபின் எய்தும் பெரும் பயனையும் பார்த்துதான் ஒரு செயலைச் செய்யவேண்டுமாம்.
செயல் என்றால் பெரும் பயன் இருக்க வேண்டும் – இதுதான் முக்கியம் தம்பி என்கிறார்.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.” --- குறள் 676; அதிகாரம் – வினை செயல்வகை
முடிவும் = வினை செய்யும்போது அதை முடிக்கும் முயற்சியும்; இடையூறும் = அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும்படுபயனும் = அந்த இடையூறுகளைத் தகர்த்து வினையை முடித்து பெறும் பெரும் பயனும்; பார்த்துச் செயல் = சீர்தூக்கிச் செய்க.
வினை செய்யும்போது அதை முடிக்கும் முயற்சியும், அவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அதற்கு வரும் இடையூறுகளும், அந்த இடையூறுகளைத் தகர்த்து வினையை முடித்து பெறும் பெரும் பயனையும் சீர்தூக்கிப் பார்த்து செய்க.
முயற்சிகளுக்கும், இடையூறுகளை களைவதற்கும் செலவிட்டதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அதனால் கிடைக்கும் பயன் பல மடங்காக இருக்க வேண்டும் என்கிறார்.
எல்லாமே ஒரு கணக்குதான் தம்பி என்கிறார். கணக்கு கணக்கு முக்கியம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments