13/07/2022 (502)
மாணிக்கவாசகப் பெருமான், தேனூறும் திருவாசகத்தில் “கண்ட பத்து” என்ற பத்து பாடல்களில், ஐந்தாவது பாடலாக:
“சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில் அமுதானானைக் குலாவுதில்லை கண்டேனே.” --- பாடல் 5, கண்ட பத்து, மாணிக்கவாசகப் பெருமான்.
அதாவது, சாதி, குலம், பிறப்பு என்னும் சுழலில் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து விடுவித்து என்னைத் தடுத்து ஆட்கொண்ட தில்லை நாயகனைக் கண்டேனே என்கிறார்.
இதனால், சாதி, குலம், பிறப்பு பாகுபாடுகள் வெவ்வேறு என்று தெரிகிறது, அது மட்டுமல்ல, அவை துன்பத்தில் ஆழ்த்துகின்றன என்றும் தெரிகிறது.
அப்பர் சுவாமிகள் ஐந்தாம் திருமுறையில், திருமாற்பேறு – திருக்குறுந்தொகையில், ஒரு பாடலாக
“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.” ---தேவாரம் பாடல் 5.60.3; திருநாவுக்கரசப் பெருமான்
நாம் கொள்ள வேண்டிய பாத்திரம் பரம்பொருள், அதைப் பணிந்தால் ஒரு நொடிக்குள் எல்லா அருளும் கிடைக்குமே. அதை விட்டு, விட்டு கோத்திரத்தையும், குலத்தையும் பிடித்துக் கொண்டு ஏன் உழல்கிறீர்கள் என்கிறார் திருநாவுக்கரசப் பெருமான்.
சரி, இது எல்லாம் துறவிகளுக்குச் சரி. நாம் அவ்வாறல்லவே!
திருமங்கை ஆழ்வார் சுவாமிகள், ஆழ்வார்களிலே அதிகமான பாசுரங்களை இயற்றியவர். ஆழ்வார்களில் இளையவர், இறுதியானவர். ஆழ்வார்கள் இயற்றிய திவ்யபிரபந்தங்களின் சாரமாக “திருமந்த்ரார்த்தம் இது தான்” என்று போற்றப் படும் ஒரு பாசுரம் ஒன்றை அருளியுள்ளார். எப்படி சைவப் பெருமக்கள் இறுதிக்காலத்தில் சிவபுராணம் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதைப் போல வைணவப் பெருமக்கள் இந்தப் பாசுரத்தைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதோ அந்தப் பாசுரம்:
“குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும்; நீள் விசும்பு அருளும்; அருளொடு பெரு
நிலம் அளிக்கும்; வலம் தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.”
சரி, நாம் கேள்விக்கு வருவோம்.
மேற்கண்ட அருளாளர்களின் பாடல்களின் மூலம் சாதி என்பது வேறு. குலம் என்பது வேறு என்று புரிகிறது.
சாதி பிறப்பின் அடிப்படையில் வரலாம். திருமங்கை ஆழ்வார் சுவாமிகள் அறுதியிட்டுச் சொல்கிறார் “குலம் தரும்”. அதாவது, உன்னை உயர்த்திக் கொள்ள நல்ல சூழலைத் தரும் என்கிறார். திருமங்கை ஆழ்வார் பெருமான் கள்ளர் குடியில் பிறந்து உயர்ந்தவர்.
அதாவது, குலம் என்பது நம் கையில் இருக்கின்றது. தொடர்ந்து சிந்திப்போம். குறளையே தொடர்ந்து சிந்தித்தால் சற்று களைப்பாகி விடுகிறது அல்லவா? அதனால், சற்று வெளியே சென்று மீண்டும் குறளுக்கு வருவோம் என்று எனது ஆசிரியப் பெருமான் சொல்லிச் சென்றார்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments