04/04/2022 (402)
எந்த ஒரு தொழிலுக்கும் முதலீடு அவசியம். தொழிலுக்கு மட்டுமா எந்தச் செயலுக்குமே ஒரு முதல் தேவைப்படுகிறது முதலில். முதல் பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை!
'முதல்' என்றச் சொல்லை, ஆங்கிலத்தில் investment, capital என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
‘முதல்’ அதிக இன்பம் அளிக்குமா? அதனால் வரும் ‘வட்டி’, ‘வருமானம்’ அதிக இன்பம் அளிக்குமா? என்று கேட்டால் முதலால் வரும் வட்டிதான் இன்பம் அளிக்கும். பயன்கள்தான் இன்பம் அளிக்கும். அதனால்தான் என்னமோ, வட்டியை, வருமானத்தை “interest” என்று அழைக்கிறார்கள். Interestingகா இருக்கு இல்லையா?
முதல் குறளிலேயே “… ஆதி பகவன் முதற்றே உலகு.” என்றார் நம் பேராசான். இயற்கை என்ற முதல் கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது. (ஆதி பகவன் – இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. ஆனால் இங்கே வல்லினம் மிகவில்லை.)
ஆக, ‘முதல்’ இல்லாமல் ஒன்றும் நடக்காது. நடக்காது என்பதுமட்டுமல்ல நிற்கவும் நிற்காது. ஒரு கட்டிடம் நிற்க வேண்டுமா அதற்குத் தூண்கள்தான் (pillars) முதல். தூண்களைச் சார்ந்தே கட்டிடம் நிலைக்கும்.
சரி, ஏன் இதெல்லாம் இப்போன்னு கேட்கறீங்க? இருக்கு. காரணம் இருக்கு. நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால்:
முதல் போடாம ஊதியம் இல்லை ராஜா என்கிறார். அதுபோல, ராஜாவே ஆனாலும் அவனின் அரசைத் தாங்கிப் பிடிக்க பெரியவர்கள், சான்றோர்கள் தூண்களாக நிற்காமல் இயலாது என்கிறார்.
‘தூண்’ என்பதற்கு ‘மதலை’ என்றச் சொல்லைப் பயன்படுத்துகிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. ஆச்சரியமான செய்தி ‘மதலை’ என்றால் ‘குழந்தை’ என்றப் பொருளும் இருக்கு. குழந்தைகள் மேல நாம் முதலைப் போடுவதால் அதுவே பிற்காலத்தில் நம்மைத்தாங்கி நிற்கும் தூண்களாக இருக்குமா? இது நிற்க.
“முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை.” --- குறள் 449; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்.
மதலை = தூண்; முதலிலார்க்கு ஊதியம் இல்லை = முதல் போடாமல் தொழில் செய்தால் ஊதியம் கிடைக்காது; மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை = (அது போல) அரசர்களுக்கு தம் அரசைத் தாங்கி நிற்கும் தூண்களானப் பெரியவர்களைச் சார்ந்து இல்லை என்றால் நீடித்து நிலைக்க இயலாது.
அப்போ, நமக்கு பெரியவர்கள்தான் ‘முதல்’. அவர்களைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments