01/04/2024 (1122)
அன்பிற்கினியவர்களுக்கு:
காதலில் வீழ்ந்த இருவர்க்கு எது இனியது என்றால் காற்று வெளியிடை இல்லாமல் கட்டித் தழுவி இன்பம் துய்ப்பது என்கிறார். இந்தக் குறளை மகாகவி பாரதியின் பாடலுடன் இணைத்து முன்பு சிந்தித்துள்ளோம். காண்க 12/09/2022. மீள்பார்வைக்காக:
“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.” 1108; புணர்ச்சி மகிழ்தல்
காற்றும் இடைபுகாது நெருக்கித் தழுவுதல், காதலில் விழ்ந்த இருவர்க்கும் இனிதே.
அந்தத் தருணத்தை நினைத்துப் பார்க்கிறான். காற்றாவது கொஞ்சம் வரட்டுமே என்று சற்று தளர்ந்திருக்கப் பார்த்தேன். அந்த நொடியில் அவளின் கண்கள் பெருமழையைப் பெய்து வாடியும் போயின.
முயக்கிடை தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். – 1239; - உறுப்பு நலன் அழிதல்
தண் வளி = மெல்லிய குளிர்ந்த காற்று; போழ = பிளக்க, பிரிக்க, இடைவெளிவிட; பேதை = என்னவள்;
முயக்கிடை = இருவரும் இறுகத் தழுவி இருந்த நிலையில் எங்களின் ஊடாக; தண் வளி போழ = மெல்லிய குளிர்ந்த காற்று நுழைய;
பேதை பெருமழைக் கண் பசப்புற்ற = அந்தச் சிறிய இடைவெளியையும் தாங்கிக் கொள்ளாமல் என்னவளின் கண்களில் இருந்து பெருமழை பெருக அவை ஒளியிழந்தன.
இருவரும் இறுகத் தழுவி இருந்த நிலையில் எங்களின் ஊடாக, மெல்லிய குளிர்ந்த காற்று நுழைய, அந்தச் சிறிய இடைவெளியையும் தாங்கிக் கொள்ளாமல் என்னவளின் கண்களில் இருந்து பெருமழை பெருக அவை பொலிவிழந்தன.
அப்படி இருந்தவள், இப்பொழுது, இந்தப் பெரும் பிரிவை எப்படித் தாங்கிக் கொள்கிறாளோ? என்று புலம்புகிறான்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments