01/07/2023 (849)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இறைமாட்சியில் அடுத்து உள்ள ஐந்து பாடல்கள் (386-390) மூலம் இறையின் மாட்சியும் அதனால் எய்தும் பயனையும் ஒருங்கே சொல்கிறார்.
ஒரு தலைவன் என்பவன் என்னதான் சிறந்தவன் என்றாலும் அவன் மக்களுடன் நன்றாகப் பழகுபவனாக இருக்க வேண்டும். அதற்கு அவன் மக்களுள் ஒருவனாக அதாவது காட்சிக்கு எளியனாக இருக்க வேண்டும். மேலும் அவன் மக்களுடன் இனிமையாக் கலந்து உரையாடுபவனாகவும் இருக்க வேண்டும் என்றார் குறள் 386 இல். காண்க 03/01/2023 (670). மீள்பார்வைக்காக:
“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.” --- குறள் 386; அதிகாரம் – இறைமாட்சி
குறைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கும், செயலைச் செய்யும் முறைகளைத் தெரிந்து கொள்ள வருபவர்களுக்கும், எளிதில் அணுகக் கூடிய வகையில், கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் இனிமையான சொற்களைப் பயன்படுத்தும் தலைமையை, அத் தலைமையின் கீழ் உள்ள மக்கள் உயர்த்திப் பேசுவார்கள்.
மேலும், இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து நல்லதொரு வாழ்வினைத் தன் குடிகளுக்கு அளிக்க வல்லத் தலைமைக்கு இந்த உலகம் அந்தத் தலைமை கண்டாற் போல அதன் வசப்படும் என்றார். காண்க 21/12/2022 (657). மீள்பார்வைக்காக:
“இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.” --- குறள் 387; அதிகாரம் – இறைமாட்சி
இந்தக் குறளைத் தொடர்ந்து வரும் பாடலில்தான் மன்னவனை இறைவனாக எப்போது மக்கள் பார்ப்பார்கள் என்னும் இரகசியத்தைச் சொல்கிறார். அதாவது, மக்களைத் துன்பமுறாமல் வளர்ச்சிக்குத் தேவையானவைகளைச் செய்து காப்பாற்றும் மன்னவனை, அவனும் ஒரு மனிதனே என்றாலும், அவனை இறைவன் என்று உயர்த்துவார்களாம்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.” --- குறள் 388; அதிகாரம் – இறைமாட்சி.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் = அறத்தில் இருந்து பிறழாது மக்கள்படும் துயரங்கள், துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்ல நிலைக்கு உயர்த்தும் தலைவன்; மக்கட்கு இறையென்று வைக்கப்படும் = அம் மக்களால் அவர்களுக்கு அவன் இறைவன் என்று போற்றப்படுவான்.
அறத்தில் இருந்து பிறழாது மக்கள்படும் துயரங்கள், துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்ல நிலைக்கு உயர்த்தும் தலைவனை, அம் மக்கள், இறைவன் என்று போற்றுவார்கள்.
நாளைத் தொடருவோம். நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments