18/08/2022 (537)
சாதிப் பெருமை உடல் அழிந்தால் அழிந்துவிடும். ஆனால். ஒருவர் கல்வியால் பெறும் உயர்ச்சி காலத்தாலும் நிலைத்து நிற்கும். ஆன்மா அழிவில்லாதது என்கிறார்களே அது போல! உயிரோடு செல்லும் கல்வியானது உயர்வு என்பதால் கல்வி மிகவும் சிறந்தது என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
எந்த இடத்தில் இதைச் சொல்கிறார் என்றால் கல்லாமை எனும் அதிகாரத்தில் வரும் ஒரு குறளில் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்.
நல்ல குடியில் தோன்றி இருந்தாலும், தம்பி, நீங்க படிக்கலைன்னா உங்களை இந்த உலகம் பெரிய குடியில் தோன்றியவர் என்று ஏற்றாது. வாய்புகள் அற்ற கீழ் குடியில் ஒருவன் பிறந்து அவன் கல்வியிலே தேர்ச்சி பெறுவானாயின், அவனைப் போல யார் வருவார் என்று இந்த உலகமே போற்றிப் புகழும்.
“மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.” --- குறள் 409; அதிகாரம் – கல்லாமை
வாய்ப்புகள் அற்ற கீழ் குடியில் பிறந்திருந்தாலும் அவனின் முயற்சியால் கற்றவன் ஆனால் அவனுக்கு கிடைக்கும் அனைத்துப் பெருமையும் நல் குடியில் பிறந்த கல்லாதவனுக்கு கிடைக்காது.
கல்வியானது குலம் தரும்.
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்!
ஔவையார் பெருந்தகை மூதுரையில் கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறார்.
“மன்னனும் மாசு அறக்கற்றோனும் சிர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் – மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை – கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.” --- பாடல் 26; மூதுரை
‘வெற்றி வேற்கை’ அல்லது ‘நறுந்தொகை’ என்று அழைக்கபடும் அதிவீரராம பாண்டியர் அவர்களால் இயற்றப் பெற்ற நூலில்:
“எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடியில் கற்றோரை மேல்வர் என்பர்.” --- பாடல் 38; வெற்றி வேற்கை
கல்வியானது ஒரு கடவுச் சீட்டு (Passport). அது மட்டுமல்ல, எந்த நாட்டிலும் குடியுரிமை (citizenship) பெறுவதற்கும்கூட வாய்ப்பு உண்டு.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Very true. Education is very very important. Key is type of education.. In addition to skilling it should make him humane too.