top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

முற்றியும் முற்றாது எறிந்தும் ... 747

24/06/2023 (842)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒரு நாட்டினை வெல்ல நேரிடையாகப் போரிட்டுத்தான் வெல்ல வேண்டும் என்பதில்லை. வாளினைத் தூக்காமலும், வேலினை எரியாமலும், ஆயுதங்களைத் தாங்கமலும்கூட வெல்ல முடியும். அதிலும் இரு வழிகள் உள்ளன. ஒன்று அகிம்சை என்னும் அற வழி. மற்றொன்று, ‘குயுக்தி’ என்னும் தந்திரம்.


குயுக்தியால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். மனத்தைக் குழப்பிவிட்டால் போதும். சாதியாலோ, மதத்தாலோ, பரம்பரைப் பெருமையாலோ “நீ யார் தெரியுமா?” என்று கேட்பதுதான் முதல் படி.


நாம் காதைக் கூர்மையாகத் தீட்டி ஆவலுடன் கேட்க ஆரம்பித்தால், நம்மைப் பற்றி சொல்லமாட்டார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யாருமே அறிந்திராத ஒருவனையோ அல்லது ஒரு கூட்டத்தையோச் சுட்டி நீ அவர்களின் வாரிசு என்பார்கள்.


உடனே, அவன் யார் தெரியுமா? என்ற கேள்வியைப் போட்டு மடை மாற்றுவார்கள். அவனின் பெருமைகளையெல்லாம் அளந்துவிடுவார்கள். அதனால், நீ தான் அவன் என்பார்கள்!


நச்சு விதையைத் தூவியாகிவிட்து. அது தன் வேலையை உடனே ஆரம்பித்துவிடும்.


உடனே, அவன் சொந்தப் பெயரையே மாற்றுவான். ஒருவன், நான் கரிகாலன் என்பான். மற்றவன் நான் நெடுஞ்சேரலாதன் என்பான். இதற்கு ஏது எல்லை?


நாம் அனவரும் பழையப் பகையைத் தீர்க்கப் புறப்பட்டுவிடுவோம்.

நம்மாளுக்கு அது போதும். உடனே வாளும் வேலும்தாம் உதவும் என்பான். “அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்” என்பான். பிறகு என்ன வன்முறைதான் வழி என்பான். அது என் முன்னோர் காட்டிய ஒரே வழி என்பான்.


அதுவும் சரிதான். அனைவரின் முன்னோடிகளும் காட்டு மிராண்டிகள்தானே!


குழப்பியவர்களுக்குத் தெரியும், வாளைத் தூக்கியவன் வாளினாலே அழிவான் என்பது. இதற்கு உதாரணங்கள் தேவையில்லை. வரலாற்றில் இரணங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றது.


மகாபாரதத்தில் எப்படி சகுனி என்ற ஒரே ஒருவன் துரியோதனாதியர்கள் அனைவரையும் அழித்தானோ அது போல.


துரியோதனாதிரியர்களை மட்டுமா அவன் அழித்தான்!


சரி இந்தக் கதையெல்லாம் எதற்கு?


நம் பேராசான் அரண் என்பதை இவ்வாறுதான் விரிக்கிறார்.

நேரிடையாகப் பகையானது நம்மைச் சூழ்ந்து முற்றுகையிட்டால் அதைச் சமாளிக்கும் வகையிலும், அது மட்டுமல்லாமல், குழப்பி குழி பறிக்கும் குள்ள நரி கூட்டங்களும் நுழைய முடியாதவாறு மனத் தெளிவோடு மக்கள் இருப்பதும் அரண் என்கிறார்.


முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண்.” --- குறள் 747; அதிகாரம் – அரண்


முற்றியும் = நேரிடையாகவே நம்மைச் சூழ்ந்து தாக்கினாலும்; முற்றாது எறிந்தும் = நேரிடையாக இல்லாமல் மறைமுகமாகத் தூரத்தில் இருந்து கொண்டே மக்களின் மனத்தில் குழப்பங்கள் விளைவித்தும்; அறைப்படுத்தும் பற்றற்கு = நாட்டை ஒடுக்க நினைப்பவர்க்கு; அரியது அரண் = வெல்ல முடியாமல் இருப்பது அரண்.


நேரிடையாகவே நம்மைச் சூழ்ந்து தாக்கினாலும், அவ்வாறு இல்லாமல், மறைமுகமாகத் தூரத்தில் இருந்து கொண்டே மக்களின் மனத்தில் குழப்பங்கள் விளைவித்தும், நாட்டை ஒடுக்க நினைப்பவர்க்கு வெல்ல முடியாமல் இருப்பது பாதுகாப்பு.


“அறைபடுத்தும்” என்பதற்கு பரிமேலழகப் பெருமான் “அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்” என்கிறார்.


அதாவது, “மக்களை அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டே அவர்களின் மனத்தைக் குழப்பி, கீழறுத்து, நாட்டை உடைத்து பகைவனுக்கு வேண்டிய வழியைத் திறந்தும்” என்கிறார்.


முதலில் வந்தவனை முதலியார் என்பான்; காட்டிலிருந்து வந்தவனைக் காட்டான் என்பான். இப்படிச் சின்னஞ்சிறு கதைகள் சொல்வான். தீயை மூட்டுவான். அதனைக் கேட்டு, இந்தச் சமுகம், மாயும், மாய்க்கும் விந்தை மனிதர்களாக மாறிப்போகும். அதில் அவன் சுகமாக குளிர் காய்வான். அவன் என்பது ஒருவன் என்று நினைக்க வேண்டாம்.


எப்படி, எப்போதெல்லாம் அநியாயம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பரந்தாமன் தோன்றுவான் என்பார்களே அது போல, எப்போதெல்லாம் அமைதி தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவன் தோன்றுவான்!


அதை அறிந்துத்தான் சொல்லியிருக்கிறார் நம் பேராசான். உணவைத் தயாரித்துவிடலாம்; மற்ற அத்தியாவசியப் பொருள்களையும் உற்பத்தி செய்துவிடலாம்; நல்ல மக்களையும்கூட பெற்றுவிடலாம்! இருப்பினும் சகுனிகள் தோன்றவிடக் கூடாது. அது மிக முக்கியமான அரண் என்கிறார்.


இது நாட்டுக்கு மட்டுமல்ல. வீட்டிற்கும், நிறுவனங்களுக்கும் ஏன் தனி மனிதர்களுகும்கூடப் பொருந்தும்.


இலக்குகளை நோக்கி நருவோம். அதுதான் முக்கியம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page