04/09/2023 (912)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நான் அவளைத் தீண்டினேன்! கொஞ்சினேன், குலாவினேன். எனக்கு எல்லையில்லா இன்பத்தைத் தந்தாள்! ஆனால் அவள் என் மனைவி அல்ல! யார் அவள்?
ஆசிரியர்: அப்படியெனில் நீங்கள் உங்கள் மகளைக் கொஞ்சியிருப்பீர்கள். அதுதானே?
நம்மாளு: ஆமாம் ஐயா. சரியாகச் சொன்னீர்கள்.
ஆசிரியர்: மக்களின் மெய்தீண்டல் உடற்கின்பம் என்கிறார் நம் பேராசான். இது ஒரு மிகப் பெரிய உளவியல் உண்மை. ஆயிரம் இருந்தும் வசதிகள் பல செய்து கொடுத்தும் தம் மக்களுடன் இருந்து அமர்ந்து கொஞ்சிக் குலாவி அன்பினை வெளிபடுத்தாவிட்டால் அந்த மக்கள் தடம் புரள காலமும் நேரமும் குறித்துவிட்டீர்கள் என்று பொருள்.
ஒன்றுமே இல்லாத காலத்தில் தங்களிடம் இருக்கும் அன்பைப் பகிர்ந்து கொண்டு முன்னேறியவர்கள் ஏராளம்.
அன்புக்குரியவர்களைத் தீண்டி, முத்தமிட்டு, இப்படியும் அப்படியுமாக தலையைக் கோதி, அவர்களை தம் அரவணைப்பில் வைத்திருந்தால் அந்தக் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வளரும்.
செல்வத்தைத் தேடி இருவரும் ஓடும் இக்காலத்தில் இது ஒரு நடைமுறைச் சிக்கலாகிவிடுகிறது. இந்த அன்புத் தீண்டல்கள் குறையும் போது அந்தக் குழந்தைகள் தனித் தனித் தீவுகளாகிவிடுகின்றனர். குடும்பத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். போலி நட்புகளும் உறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்பு வேண்டுமா? நீ அதைக் கொடு, இதைக் கொடு என்று பண்ட மாற்றாக மாறிவிடுகிறது வாழ்க்கை!
உள்ளத்திற்காக வாழ்வது இல்லாமல் உலகிற்காக வாழ்தலாகிவிடுகிறது வாழ்க்கை!
அப்பா அம்மா தங்களிடம் நெருங்கிப் பேசுவதைக்கூட அருவருப்பாக உள்ளது என்னும் குழந்தைகள் வலம் வருகிறார்கள். அயலவர் தொடலில் இன்பமும் அடைகிறார்கள். இந்தத் தருணத்தில் நம் பேராசான் மற்றும் மகாகவி போன்றோர் சொல்வதையும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளன. உரிய பருவம் வரும்வரை தம் மக்களை தம் அரவணைப்பில் வைப்பது மிக முக்கியம்.
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.” --- குறள் 65; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்
உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல் = ஒருவர்க்கு இன்பமாவது தம் மக்களுடன் கொஞ்சிக் குலாவி அவர்களை அன்புடன் தீண்டுவது; செவிக்கு இன்பம் அவர் சொற்கேட்டல் = செவிக்கு இன்பமாவது அவர்களின் சொல்களைக் கேட்டல்.
மற்று வினை மாற்றின்கண் வந்தது.
ஒருவர்க்கு இன்பமாவது தம் மக்களுடன் கொஞ்சிக் குலாவி அவர்களை அன்புடன் தீண்டுதல்; செவிக்கு இன்பமாவது அவர்களின் சொல்களைக் கேட்டல்.
தீண்டல் என்றவர் அந்தச் செயலை மாற்ற ‘மற்று’ என்று இடையில் போட்டு மாற்றுகிறார். அஃதாவது உரிய பருவம் வரும்வரைத் தீண்டலும், எப்போதும் சொல் கேட்டலும் என்று பொருள்படும்.
தீண்டலுக்குக் கால வரைமுறை உண்டு; கேட்டலுக்கு அஃது இல்லை.
மழலைச் சொல் மட்டுமன்று இன்பம் தருவது. அவர்கள் வளர்ந்து வரும் காலங்களிலும், கற்று அறிந்து அவர்கள் சொல்லும் சொல்லினைக் கேட்டலும் இன்பம் என்கிறார்.
இதுதான் நம் பேராசானின் சுட்டித்தனம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments