11/03/2023 (737)
மாவலியின் தலையில், தனது மூன்றாவது அடியாக காலை வைத்து அழுத்தி அழித்தார், அந்த நெடியவர்!
நெடியோய், எனக்கு ஒரு வரம் வேண்டுமென்றார் மாவலி. நான் ஆண்டு தோறும், இதே நாளில், எனது உயிரினும் மேலான எனது மக்களைக் காண வேண்டும் என்றார். அந்த நாள்தான் ஓணம். அன்றைய தினம் தங்களை மாவலி சந்திக்க வருவதாக ஒரு நம்பிக்கை! நம்பிக்கை தானே நம்மை வாழ வைப்பது!
மாவலி கதை முற்றிற்று.
சரி, இதற்கும் நாம் பார்க்கவேண்டிய, மடி இன்மை அதிகாரத்தின் முடிவுரையாக வரும் குறளுக்கும் என்ன தொடர்பு என்பதுதானே கேள்வி? இதோ வருகிறேன்.
நெடியவன் வாமன உருவம் எடுத்து வரவேண்டும்; பின் மாவலி முன் தன் கையைத் தாழ்த்தி, தன் நிலையையும் தாழ்த்தி இரைஞ்ச வேண்டும்; பின் அந்த மாவலி அவன் ஆளும் நிலப் பரப்பினை தானமாக கொடுக்க வேண்டும்; தானம் பெற்றதை, அதை வாங்கித்தர கேட்ட இந்திரனிடம் அளிக்க வேண்டும் ...
இந்த வானையும் மண்ணையும் ஒரு சேர ஆட்சி செய்ய இந்திரனுக்கு இப்படி பல “...டும்”கள் தேவைப்பட்டது.
இதுவெல்லாம் அவசியமில்லை என்கிறார் நம் பேராசான். ஒன்றை மட்டும் தவிர்த்து ஆட்சி செய்; விண்ணும் மண்ணும் உன் கட்டுப்பாட்டில் என்கிறார்.
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.” --- குறள் 610; அதிகாரம் – மடி இன்மை
மடியிலா மன்னவன் அடியளந்தான் தா(வி)யது எல்லாம் ஒருங்கு எய்தும் = சோம்பல் இல்லாத தலைவனுக்கு, மூன்றடி அளந்த அந்த வாமனன் தன் கால்களால் தாவியது எல்லாம் ஒரு சேர கிடைக்கும்.
சோம்பலைத் தவிர்தால் வானமும் வசப்படும் என்கிறார்.
அப்பாடா, ஒரு மாதிரி இந்த அதிகாரத்தை நிறைவு செய்தோம்.
நிறைவு செய்தோமா? இல்லை. இந்த ‘அடியளந்தான்’ குறளுக்கு மாற்று சிந்தனைகள் நிறைய உண்டு.
தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Kommentare