top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மண்ணோடு ... 576

04/02/2023 (702)

இன்றைக்கு எனக்கு ஒரு சிக்கலான குறள். முதலில் குறளையும் அதற்கான சில அறிஞர் பெருமக்களின் உரையையும் படித்துவிடுவோம்.


மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்துகண் ஓடா தவர்.” --- குறள் 576; அதிகாரம் – கண்ணோட்டம்


அறிஞர் மு.வரதராசனார் உரை: கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.


அறிஞர் சி. இலக்குவனார் உரை: பார்வையோடு பொருந்தி (துன்புற்றாரைக் கண்டால்) இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்திற்கு ஒப்பாவர்.


இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர் என்ற பொருள்வருமாறு இருக்கிறது இந்தக் குறள். இரக்கம் இல்லாதவனுக்கு மரத்தை உவமை ஆக்கலாமா? இது சரியா இருக்குமா?


...என்று யோசிக்கும் போது கவனத்திற்கு வந்தது நம்ம ஔவை பெருந்தகையாரின் பாட்டு ஒன்று, மூதுரையில் இருந்து:


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நல் மரம்.” --- பாடல் 13, மூதுரை; ஔவையார்


இந்தப் பாடல் வஞ்சப் புகழ்ச்சி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். காட்டிலே சில மரங்கள் இருக்கலாம். அதனால், சில உயிர்களுக்குப் பயனும் இருக்கலாம்.


அப்படியில்லாமல், காட்டிலே சில மரங்கள் இருக்குமாம். அது கவையாகி கொம்பாகி - அதாவது பிரிந்து பிரிந்து கொம்பு கொம்பாக இருக்குமாம். அதாவது, குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டிருக்கும் போல! அதிலே வேறு ஒன்றும் இருக்காதாம்! ஒரு காக்கா, குருவிகூட உட்காராது. அதனால், எந்தப் பயனும் இருக்காதாம்.


அப்படிப்பட்ட மரங்கள் நாட்டிலே இருந்தாலும் பரவாயில்லை, விறகு எரிக்கவாவது பயன்படும். ஆனால், இந்த கவையாகி கொம்பான மரங்கள் யாரும் அனுக முடியாத காட்டிலே இருக்குமாம். அந்த மரங்களை நல்ல மரங்கள் என்கிறார் நம் ஔவை பிராட்டி! கிண்டல்தானே அவருக்கு.


இது என்ன பிரமாதம். (இதை விட இன்னும் ஒரு special item இருக்கு). இதற்கும் மேலே ஒரு நல்ல மரம் இருக்கு. அது எதுவென்று சொல்லட்டுமா என்கிறார்!


நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன்: எழுதிக்காண்பித்தலும் புரிந்து கொள்ளாதவன்; குறிப்பாலும் உணர்ந்து கொள்ளாதவன் – இவன்தான் அந்த ரொம்ப நல்ல மரம் என்கிறார். கிண்டல்தானே அவருக்கு!


தன்னாலேயும் முடியாது; சொன்னாலும் புரியாது – பயனற்றவன் (waste piece) என்கிறார். இது நிற்க.


சரி. நம்ம பேராசான் கிண்டலாக, மரத்தை வஞ்சப்புகழ்ச்சியாகப் பயன்படுத்துகிறாரா என்று பார்த்தால் அதற்கான குறிப்புகள் அந்தக் குறளில் இல்லை.


ஆனால், இரக்கம் இல்லாதவன் மரம் என்று திட்டுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.


மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்துகண் ஓடா தவர்.” --- குறள் 576; அதிகாரம் – கண்ணோட்டம்


‘மண்னோடு இயைந்த மரம்’ என்பதற்கு ‘மண்ணோடு மக்கிப்போன மரம்’ என்பது பொருள் போலத் தெரிகிறது. குச்சி குச்சியாக இருந்தாலும் பரவாயில்லை. அது காய்ந்து இருந்தால் எரிக்கவாவது பயன்படும். மக்கிப் போன மரம் எதற்குப் பயன்படும்? அதைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.


‘கண்ணொடு இயைந்து கண் ஓடாதவர்’ என்றால்? கண் என்றால் இரக்கத்தில் ஊறி இருக்கனும். அப்படி இல்லாமல் இருப்பவன் என்கிறார். அதாவது, இரக்கமற்றவன் என்கிறார்.


இரக்கம் இல்லாதவன் மக்கிப்போய் குப்பையான மரம் போலத்தான்! என்பது போல எனக்குத் தெரிகிறது.


உங்கள் கருத்து என்ன?


பி.கு.: ஆசிரியர் இன்றைக்கு வரவில்லை. குற்றம் குறைகள் அடியேனுக்கே! நிறைகள் என் ஆசிரியப் பெருமக்களுக்கே.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)








Comments


Post: Blog2_Post
bottom of page