19/06/2023 (837)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சிறுபஞ்சமூலம் என்றால் ஐந்து சிறிய மூலிகைச் செடிகளின் வேர்கள் என்று பொருள்படும். அவையாவன: சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய செடிகளின் வேர்களாகும்.
இது போல், ஐந்து கருத்துகளை உள்ளடக்கி பெரும்பாலான பாடல்கள் கொண்ட தொகுப்பினை சிறுபஞ்சமூலம் என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த நூல் பதிணென் கிழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும். இந்த நூலின் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள். இதனை இயற்றியவர் மாகாரியாசன் என்னும் சமண சமயத்தைத் தழுவிய ஒரு பெரும் புலவர் என்றும் அறியப்படுகிறது.
“நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு
மாண்ட மலைமக்க ளுள்ளிட்டு-மாண்டவ
ராய்ந்தன வைந்து மரணா வுடையானை
வேந்தனா நாட்டல் விதி.” பாடல் 48; சிறுபஞ்சமூலம்
நிவந்து = உயர்ந்து. வேந்தன் = அரசர்களுக்கு அரசன். நீண்ட நீர் நிலைகள், காடுகள், களர் நிலம், உயர்ந்து வானுர ஓங்கிய மலைகள், மக்கள் உள்ளிட்ட ஐந்தினையும் அரணாக உடையவனை வேந்தனாக நியமிப்பது என்பதை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
பண்டையக் காலத்தில், மக்கள் வாழும் பகுதிகளை, குறுஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்) என்று நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். முல்லையும் குறுஞ்சியும் முறைமையில் திரிந்தால் பாலை என்றும் வகுத்திருந்தனர்.
இப்படியான பல வகைப் பரப்புகளையும், அதில் வாழும் மக்களையும் காவலாக, பாதுகாப்பாகக் கொண்டவனை வேந்தனாக நியமிப்பது மரபு.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.” --- குறள் 742; அதிகாரம் – அரண்
மணி = கருநீல நிறம்; மணி நீரும் = மணி போன்ற நிறத்தினை உடைய நீரும்; மண்ணும் = நீரும் நிழலும் இல்லா மரு நிலம்; மலையும் = மலைகளும்; அணி நிழல் காடும் = குளிர்ந்த நிழலினை உடையக் காடுகளையும்; உடையது அரண் = கொண்டிருப்பது அரண்.
மரு நிலம், களர் நிலம் என்பன நாட்டைச் சுற்றியிருந்தால் அதுவும் ஒரு பாதுகாப்பாம். அந்த நிலப் பரப்பை எதிரிகள் கடக்க சிரமப்படுவார்களாம்.
நீர் அரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையாகவும் செயற்கையாகவும் அரண்கள் அமைவது சிறப்பு.
இவைகள் அரண்களாகவும் இருக்கும். மக்களுக்கு வாழ்விடமாகவும் இருக்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
ความคิดเห็น