17/02/2022 (356)
குறிப்பறிதலில் நாம ஒரு குறள் பார்த்தோம். காண்க - 27/10/2021 (246).
மிள்பார்வைக்காக:
“அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.” --- குறள் 706; அதிகாரம் – குறிப்பறிதல்
அடுத்தது காட்டும் பளிங்குபோல = பளிங்கின் பக்கத்தில் எந்த நிறப் பொருளை வைத்தாலும் அந்த நிறத்தை அது காட்டுவது போல; நெஞ்சம் = மனதின் தவிப்பு; கடுத்தது= மிக்கது, அதிகம் பாதித்தது (கடி என்ற உரிச்சொல்லிருந்து வந்துள்ளது); காட்டும் முகம் = காட்டிக் கொடுக்கும் முகம்.
இது நிற்க.
நேற்றைய உரையாடல் எப்படி தொடருகிறது என்பதைப் பார்ப்போம்.
அவன் தொடர்கிறான்: உன் தலைவி இருக்கிறாளே அவள் ஒரு மணி மாலை. அதுவும், எப்படிப் பட்ட மணி மாலை தெரியுமா? பளிங்கு மணி மாலை. அதுவும், தூய பளிங்கு மணிமாலை.
“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ, அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விடமாட்டேன் …” என்று கவிஞர் வைரமுத்துவை இப்போது அழைக்கத் தேவையில்லை.
பளிங்கு அடுத்தது காட்டும் என்று அவளிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால், ஒன்று அவளிடம் சொல்லவில்லை. நல்ல தூய பளிங்கு (crystal) என்ன செய்யும் என்றால் அடுத்ததையும் காட்டும், உள்ளே இருப்பதையும் ஓரளவிற்கு காட்டிவிடும்.
பளிங்கு மணி மாலையில் உள்ளே, அதைக் கோர்த்த நூல் இருக்கும். அந்த நூலும் வெளியே தெரியும். அது போல அவளிடமும் இருக்கும் ஒன்று எனக்குத் தெரிகிறது. ஒளித்து வைத்து விட்டேன் என்று இருக்கிறாள். அதை முழுமையாகச் சொன்னால் என்ன? ஏன் ஓளித்து வைக்க வேண்டும்? கொஞ்சம் கேட்டு சொல்லேன் – என்கிறான் தோழியிடம்.
தோழி வழக்கம் போல மௌனம்.
இதோ அந்தக் குறள்:
“மணியில் திகழ்தரு நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.” --- குறள் 1273; அதிகாரம் - குறிப்பு அறிவுறுத்தல்.
மணியில் = பளிங்கு மாலையில்; திகழ்தரு = தோன்றும்; நூல் போல் = நூலைப் போல; மடந்தை = என்னவள்; அணியில் = அவள் அழகில்; திகழ்வது ஒன்று உண்டு = வெளிப்படுவது ஒன்று இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários