04/04/2023 (761)
அமைச்சருக்குத் தேவையான பதினான்கு குணங்களை முதல் ஐந்து குறள்களின் வழி பட்டியலிட்டார்.
அப்படி ஒருவர் இருந்தால் அவரை பாராட்டி சிறப்பிக்கனும் இல்லையா? அதனால் வரும் குறளில் சிறப்பிக்கிறார்.
அப்படி எல்லா குணங்களும் இருந்தால், அவர்களுக்கு இயற்கையாகவே அறிவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இல்லையா?
இயற்கையாக அமைந்த நுட்பமான அறிவுடன், படிப்பறிவும் இருந்தால், அந்த அமைச்சரை எதிர்கொள்ள எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் முடியுமா? முடியாது என்கிறார்.
“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.” --- குறள் 636; அதிகாரம் – அமைச்சு
மதிநுட்பம் = நுட்பமதி = இயற்கையான நுண்ணறிவு;
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு = இயற்கையான நுண்ணறிவையும் மற்றும் நூல்களால் கற்றுணர்ந்த அறிவும் உடைய அமைச்சருக்கு;
அதிநுட்பம் முன்னிற்பவை யாவுள? = (முன்னால்) எதிர்த்து நிற்க எந்த அதிநுட்பமான சூழ்ச்சிகளால் முடியும்? முடியாது.
இயற்கையான நுண்ணறிவையும் மற்றும் நூல்களால் கற்றுணர்ந்த அறிவும் உடைய அமைச்சருக்கு முன்னால் எதிர்த்து நிற்க எந்த அதிநுட்பமான சூழ்ச்சிகளால் முடியும்? முடியாது.
இந்தக் குறளால் அமைச்சரின் சிறப்பு கூறினார்.
இது நிற்க. கொஞ்சம் தத்துவம் பார்ப்போம்.
அறிவு என்பது இரு வகைப்படும். ஒன்று இயற்கை அறிவு. இதனை நுண்ணறிவு (intuition) என்றும் கூறுவர். மற்றொன்று, செயற்கை அறிவு (acquired). இது நூல் பல கற்பதாலும், குறிப்பிட்ட அனுபவங்களாலும் கிடைக்கும்.
என்னதான் பலவற்றைக் கற்றாலும், சில சமயம், இந்த உண்மை அறிவு இருக்கு இல்லையா, அது, அப்போதைக்கு அப்போது பேதலிக்குமாம். அது ஏனென்றல் நமது உணர்ச்சிகள் புகுந்து குழப்பும்.
சரி, கற்ற அறிவு பேதலிக்காதா என்ற கேள்வி எழலாம். கற்ற அறிவு என்பது விதிகள் போல. சர் ஐசக் நியுட்டனின் விதிகள் என்றால் அது அவ்வளவே! ஆனால் இந்த இயற்கை அறிவு, உணர்வுகளால் மாறுபடும்.
உதாரணம் – காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது போல.
உணர்வா? அறிவா? இதுதான் கேள்வி.
ஒரு கதை சொல்ல வேண்டும். நாளைக்குச் சொல்வோம் என்றார் ஆசிரியர்.
காத்திருப்போம் ஆவலுடன்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments