22/09/2021 (211)
வள்ளுவப் பெருமானுக்கு ஒரு சவால்! கடைசிவரைப் படிக்கவும்.
பெருந்தகை ஔவையாரின் நாலு கோடி பாடல்கள் நமக்குத் தெரியும். அதற்கு சில கதைகளும் இருக்கிறது. அதில் ஒரு கதை. ஒரு சமயம் ஒரு மன்னனின் ஒரு வித்தியாசமான போட்டி வைத்தானாம். ஒரு இரவில் ஒரு கோடி பாடல்களை இயற்ற வேண்டும் என்பதுதான் அது!
எப்படி இயலும் என்று புலவர்கள் தயங்கி மன்றத்திலேயே அமர்ந்திருந்தார்களாம். அப்போது நமது முதுபெரும்புலவர் ஔவையார் அங்கு வந்தார்களாம். செய்தியைக் கேட்ட நம் மூதாட்டி, கவலையை விடுங்கள், ஒரு கோடி என்ன நாளை காலை நாம் நான்கு கோடி பாடல்களைத் தருவோம். கவலை வேண்டாம். இப்போதைக்கு அனைவரும் ஓய்வு எடுப்போம் என்று கூறி மன்றத்திலே தலை சாய்த்து உறங்கிப் போனாராம் ஔவை பெருமாட்டி. புலவர்களுக்கு ஒரு பக்கம் தயக்கம். மறுபக்கம் சொல்லியிருப்பது முதுபெரும் புலவர். நாளை பார்க்கலாம் என்று கலைந்து சென்றார்களாம்.
காலையிலேயே அரசவை களை கட்டியிருந்தது. அரசனும் ஔவை பெருமாட்டியைக் காண ஆவலாயிருந்தான். அவர்களை அன்போடும் பண்போடும் அழைத்து தன் அருகில் ஒரு ஆசனமிட்டு அமர வைத்தான். என்ன மன்னா நலமா. கோடி பாடல்கள் கேட்டீராமே? நான் தயார், நீங்கள் தயாரா என்றாராம். மன்னர் புரிந்து கொண்டார். இன்று ஔவை பெருந்தகை ஒரு வித்தை செய்யப் போகிறார் என்று. தங்கள் சித்தம் என்று சொல்லி நாங்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலாக உள்ளோம் என்றாராம்.
மன்னா கேள்:
மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடை நாக்(கு)
கோடாமை கோடி பெறும்.
மன்னர், ஔவை பிராட்டியின் தாள் பனிந்து கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்தாராம்.
இது நிற்க. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி வள்ளுவப் பெருமானுக்கும் நடந்திருக்கலாமாம். அவருக்கு வந்த சவால் ஒரு கோடி அல்ல! பத்து கோடி! என்றார் ஆசிரியர். அது என்ன? உங்களால் உதவ முடியுமா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti