20/09/2022 (569)
நல்ல வேளை அவள் அந்த அனிச்ச மலரை காம்போடு சூடிக்கொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டு, தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு அந்தக் குளக்கரையில் அமர்ந்திருக்கிறான்.
இரவு வந்துவிட்ட து. சில்லென்ற குளிர் காற்றும் வீசத்தொடங்கிவிட்டது. மாலை நேரப் பூக்கள் மலர, அதன் நறுமனத்தை சுமந்து கொண்டு வந்த அந்த இதமான காற்று அவனைக் கிரங்க அடித்தது.
சலனமில்லா அந்தக் குளத்தில் அழகான முழு மதியின் நிழல். ஒரு கணம் தடுமாறுகிறான். அவனுக்கு, அது காதலியின் முகம் போலத் தோன்றுகிறது.
சற்றே அண்ணாந்து பார்க்கிறான். வானத்தில் விண்மீன்கள் இங்கும் அங்கும் அலை பாய்வதைக் காண்கிறான்.
ஏன் இந்த பரபரப்பு விண்மீன்களுக்கு என்று எண்ணுகிறான். கற்பனைக் குதிரை கிளம்பிவிட்டது. (அவனுக்கு ஏற்பட்ட சலனத்தை விண்மீன்கள் மேல் ஏற்றுகிறான்)
“ஓஒ.. இந்த விண்மீன்களுக்கு குழப்பம் வந்து விட்டது போலும்.” என்று எண்ணுகிறான்.
என்ன குழப்பம்? அதற்கு காரணம் கற்பிக்கிறான்.
வானத்தில் உள்ளதுதான் உண்மையான மதியா? இல்லை, என்னவளின் முகமதி தான் உண்மையான வான்மதியா? அதனால் தான் இந்த விண்மீன்கள் ஓர் இடத்தில் நில்லாமல் இங்கும், அங்கும் அலைபாய்கின்றனவோ?
“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.” --- குறள் 1116; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
நிலவு எது? என்னவள் முகம் எது? என்று அறியாது, தன் நிலையில் இருந்து கலங்கின விண்மீன்கள்
மீன் = வானத்து மீன்கள்; மடந்தை = என்னவள்; பதி = ஒரு நிலை, தன் இருப்பிடம்;
மதியும் மடந்தை முகனும் அறியா = நிலவு எது? என்னவள் முகம் எது? என்று அறியாது;
பதியின் கலங்கிய மீன் = தன் நிலையில் இருந்து கலங்கின விண்மீன்கள்
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments