20/08/2021 (178)
வாழ்க்கைத்துணைக்கு இரண்டு இலக்கணங்கள் வகுக்கிறார் நம் வள்ளுவப் பெருமான். துணைக்கு என்ன, வாழ்க்கைக்கே அதுதாங்க இலக்கணம்.
இல்வாழ்க்கைக்கு உரிய அறங்களை செய்யும் வகையிலே குணங்களும் செய்கைகளும் இல்லாளுக்கு இருக்க வேண்டும் என்பது முதல் குறிப்பு. இல்லாளின் துணையில்லாமல் யாராலும் நல்ல காரியங்களைச் செய்ய முடியாது என்பது இதனால் உணர்த்தப்படுகிறது.
வளங்களைப் பெருக்க, வருவாய்க்கு ஏற்றார் போல் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது குறிப்பு. இதனால், இல்லாளின் துணையில்லாமல் வளம்பெற இயலாது என்பது அறிவுறுத்தப்படுகிறது.
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்கைத் துணை” --- குறள் 51; அதிகாரம் – வாழ்க்கைத்துணை நலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்= இல்லறத்திற்கு ஏற்ற நற் குணங்களும் நற் செய்கைகளும் உடைய சிறப்பு உடையாள்; தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்கைத் துணை = தன்னைக்கொண்டவனது வருவாய்க்குள் வளம் காண்பவளே இல்லாள்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் (வறியவர்க்கும்), இறந்தார்க்கும், தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் (சுற்றத்தார்), தான் ஆகிய பதினொருவருக்கும் உரித்தன செய்தல் நற்குணங்களாகும். இதை இருவருக்கும் பொதுப்பட இல் வாழ்க்கை அதிகாரத்தில் கூறினார் என்றாலும், அது உண்மையாக நிகழ வாழ்க்கைத் துணைதான் உதவவேண்டும் என்பதை சிறப்புபட உணர்த்துகிறார்.
நற்செய்கைகள் என்பது மேலே சொன்ன குணங்களின் வழி செயல்களை அமைத்தல்.
வருவாய்க்குள் வளம் பெறுவது எப்படி என்பதற்கு பொருட்பாலில் வலியறிதல் என்கிற அதிகாரத்தில் ஒரு குறளை அழகாக வைக்கிறார்.
“ஆகாறு அளவிட்டது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.” --- குறள் 478; அதிகாரம் – வலியறிதல்
ஆகு ஆறு அளவு இட்டது ஆயினும் கேடில்லை = பொருள் வரும் வழி சின்னதாக இருந்தாலும் தப்பில்லை; போகு ஆறு அகலாக் கடை = பொருள் போகின்ற வழி பெரிதாக இல்லாமல் இருந்தால் போதும்
அதாங்க, குழாயை திறந்து விட்டுட்டு எப்படி ஒரு தொட்டியை நிரப்ப முடியாதோ அது போல!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்…
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments