14/10/2021 (233)
கொஞ்சம் தள்ளி நின்றே தலைமையிடம் பழக வேண்டும் என்று நேற்று பார்த்தோம். இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடிக்கக்கூடாது. வெற்றிக்கு எப்போதுமே பொறுமை முக்கியம்.
மலேசியாவில், 1998 ல், பிரதமர், துணைப் பிரதமர் இருந்தாங்க. பிரதமர் மக்களுக்கு சொல்லியிருந்தார், தான் சீக்கிரமே அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாகவும், துணைப் பிரதமரைத் தான் பிரதமராக ஆக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு சில நாட்களில், துணை பிரதமரிடம் பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு பிரதமர் வெளி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போனார். அப்போ, துணை கொஞ்சம் பிரதமர் போலவே நடந்துட்டார் போல.
பிரதமர் ஊருக்குத் திரும்பிய பிறகு எல்லாத்தையும் கேள்விப் பட்டு ‘இகல் வேந்தர்’ ஆயிட்டார். அதாங்க, கோவமாயிட்டார். துணையை பதவியை விட்டுத் தூக்கிட்டார். அதோடு விட்டாப் பரவாயில்லை. அவர் மேல பலான, பலான குற்றங்களைச் சொல்லி அவரை உள்ளே போட்டுட்டாங்க. அந்த துணை இந்த குழப்பங்களில் இருந்து வெளியே வர கிட்ட த்தட்ட இருபது வருடங்கள் ஆயிடுச்சு. அவராலே இன்னும் பிரதமராக ஆக முடியலை.
இதை எதுக்குச் சொல்றேன்னா, தலைமையை நெருங்க, நெருங்க நாம ரொம்ப உஷாராக இருக்கனும். எண் இரண்டு எப்போதும் எண் ஒன்றாக நினைத்துக் கொள்ள முடியாது.
தலைமையைப் போலவே நடை, உடை, பாவனை எல்லாம் பண்ணக்கூடாது. அவங்க விரும்புவதை எல்லாம் கொஞ்சம் தவிர்ப்பது நலம். அதாங்க, அடக்கத்தை அவங்களுக்கு அவசியமா காண்பிக்கனும். அப்போ, அவர்களுக்கு, சரி, இது நம்ம கையை மீறி போகாதுன்னு விட்டு வைப்பாங்க. இல்லை என்றால் அனுபவிக்க வேண்டியதுதான். நம்ம உள்ளூர் அரசியலிலும் இதனைப் பார்க்கலாம். அலுவலகத்தில் பணியில் இருந்தாலும் மேலதிகாரிகளிடமும் இதைக் கவனித்திருக்கலாம்.
சரி, என்ன இன்றைக்கு குறள் இல்லையான்னு கேட்கறீங்க? அதானே, குறளே இதுதான்:
“மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.” --- குறள் 692; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
மன்னர் விழைப விழையாமை = தலைமை விரும்புவதைத் தான் விரும்பாமல் இருத்தல்; மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் = தலைமையால் அந்தப் பண்பு விரும்பப்பட்டு நல்லவை நடக்கும் – (அப்படி இல்லை என்றால் அனுபவிக்க வேண்டியதுதான் என்பது – கூறாமல் கூறல்)
வள்ளுவப் பெருமானோடச் சுட்டித்தனத்தைப் பாருங்க, அவர் சொல்ல வருவது மன்னரைப் போல எல்லாவற்றையும் செய்தால் நீ காலி என்பதைத்தான். ஆனால், நன்மை நடக்கும் என்றார் கொஞ்சம் நுட்பமாக! நம்மைத் தாளிக்காமல் இருந்தால் அதுவே நன்மைதானே!
பொறுமையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
コメント