31/05/2022 (459)
நேற்று “இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை” என்றார். அதாவது, இல்லாளிடம் அடக்கம் இல்லை என்றால் நல்லாருள் நாணுத்தருமென்றார்.
அடுத்தக் குறளில் மனையாளை அஞ்சும் அவனுக்குச் சொல்கிறார்.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல, நமது நடவடிக்கையால்கூட நமது துணை மாறியிருக்கலாம். செல்லம் கொடுத்து சீரழிக்கப்படும் குழந்தைகளைப் போல!
கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும்கூட மனித இயல்புதான்.
கெஞ்சினாலே மிஞ்சும் போது, நாம் அஞ்சினால் மற்றவர்கள் என்ன, எதுவும் மிஞ்சுவது இயற்கைதானே? ஆகையினால், ‘அஞ்சற்க’ என்கிறார். எல்லாமே ஒரு பயிற்சிதான். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.
எனது நண்பர் பின்னூட்டமாக ஒரு கருத்து தெரிவித்திருந்தார். வெட்டிவிடுவது ஒன்றுதான் ஒரே வழி என்பதில்லை என்றார். அதாவது, ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகின்ற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். 1963ல் அறிவாளி என்ற திரைப்படம் ஒன்று வந்துள்ளதாம். அதைப் பாருங்கள் என்றார். தேடிப் பார்க்க வேண்டும்.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.” --- குறள் 904; அதிகாரம் - பெண்வழிச்சேறல்
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் = மனையாளிடம் அஞ்சி அவளையும் கெடுத்து தானும் கெட்டுப் போகும் ஒருவனுக்கு, வாழும் போதும் மகிழ்ச்சியில்லை, உலகை விட்டு நீத்தபின்பும் புகழில்லை;
வினையாண்மை வீறெய்தல் இன்று = (அவனுக்கு) இல்லறத்தில் செய்ய வேண்டிய பல நல்ல செயல்களையும் கடமைகளையும் செய்து பெருமையடைதல் என்பது இல்லவே இல்லை
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
コメント