06/01/2024 (1036)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒளவைப் பெருந்தகையின் அரியது என்று தொடங்கும் பாடலை நாம் முன்பு ஒரு முறை சுவைத்துள்ளோம். காண்க 31/07/2021. மீள்பார்வைக்காக:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்; அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;
பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வாராயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே. --- ஒளவையார்
தானமும் தவமும் செய்தால் வானவர் நாட்டின் வாயில் திறக்கும் என்கிறார்கள். வானவர் நாடு என்பது தேவர் உலகம், புத்தேள் உலகம், புகழ் உலகம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இது ஒரு உயரிய நிலைதான் என்பதில் ஐயமில்லை.
சரி, இவர்களுக்கும் மேலான நிலை இருக்கிறதா என்றால் இருக்கிறதாம். நம் பேராசான் சொல்கிறார். அது என்ன?
“மனத்தொடு வாய்மை மொழியின்” நீங்கள்தாம் தவம் தானம் செய்பவர்களைவிடப் பெரிய ஆளு என்கிறார். காண்க 17/03/2022. மீள்பார்வைக்காக:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை. – 295; - வாய்மை
மனத்தொடு பொருந்தி ஒருவன் உண்மையைப் பேசுவானாயின், அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைவிட உயர்ந்தவன் என்று பார்த்தோம்.
மீண்டும் இந்தக் குறளை விரிப்போம்.
அது என்ன “மனத்தொடு வாய்மை மொழியின்”?
வாய்மை என்பது தீங்கு இலாத சொலல். சொலல் என்பது ஓர் குறியீடு. பேசுவது என்பது இங்கே, சொல் முதலான அனைத்துச் செயல்களையும் குறிக்கும். மனம், மொழி, மெய் என்று சொல்கிறோமே அந்த மூன்றிலுமே வாய்மை இருந்தால் நாம்தாம் பெரிய ஆளு! யாரைவிட? தவத்தொடு தானம் செய்வாரைவிட!
மனத்தொடு வாய்மை மொழியின் =மனம், மொழி, மெய் ஆகிய மூன்றனாலும் பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருந்தால், அவர்கள்தாம்; தவத்தொடு தானம்செய்வாரின் தலை = தவமும் தானமும் செய்பவர்களைவிட மேன்மையானவர்கள்.
மனம், மொழி, மெய் ஆகிய மூன்றனாலும் பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருந்தால், அவர்கள்தாம், தவமும் தானமும் செய்பவர்களைவிட மேன்மையானவர்கள்.
அஃதாவது, நம் வரை மனம், மொழி, மெய்களால் சுத்தமாக இருந்தாலே அதுவே மேன்மை. அது இல்லாமல் தவம் செய்துதான் என்ன பயன்? தானம் செய்துதான் என்ன பயன் என்கிறார்.
கவனிக்க வேண்டியது இதுதான். நம் பேராசான், தானம், தவம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் நாம் நம்மைக் கட்டமைப்போம். பின் தவம், தானம் உள்ளிட்டவைகளைச் செய்வோம் என்கிறார். அப்போது நாம்தாம் முதன்மையானவர்கள் என்கிறார்.
வாய்மை என்றால் பொய்யாமை; பொய்யாமையைப் போல புகழ் இல்லை என்கிறார் அடுத்த குறளில்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Commenti