top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மனத்தது மாசாக ... 278, 279, 280

29/12/2023 (1028)

அன்பிற்கினியவர்களுக்கு:

நாறும் மீனை நல்ல தண்ணீரில் பல தரம் கழுவினாலும் அதன் நாற்றம் போகுமா? புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால் மனத்திலே உள்ள குற்றங்கள்தான் மறையுமா? என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

 

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோகூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே. – 65; பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்

 

சிலர் போகும் என்று எண்ணிக்கொண்டு செய்வார்கள். அவர்களுக்கு ஒரு வேளை போனாலும் போகும்.

 

ஆனால், பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது வெறும் நடிப்புதான் மற்றவர்களை ஏமாற்ற! தான் ஏதோ பெரும் ஆசார சீலர் போலக் காட்டிக் கொள்வார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம் என்று காட்டுகிறார் நம் பேராசான்.

 

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர். – 278; - கூடா ஒழுக்கம்

 

மாசு மனத்தது ஆக = குப்பைகளான எண்ணங்கள் மனம் முழுவதும் நிரம்பியிருக்க; மாண்டார் நீர் ஆடி = தாம் ஏதோ தவ நெறியில் இருப்பவர் போலப் புனிதத் தீர்த்தங்களில் நீர் ஆடி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் = நடித்து வாழும் மாந்தர் பலர்.

 

குப்பைகளான எண்ணங்கள் மனம் முழுவதும் நிரம்பியிருக்க, தாம் ஏதோ தவ நெறியில் இருப்பவர் போலப் புனிதத் தீர்த்தங்களில் நீர் ஆடி, நடித்து வாழும் மாந்தர் பலர்.

 

இரண்டு குறிப்புகள்: ஒன்று – நீராடினால் மன மாசுகள் போகா; இரண்டு – நடித்து வாழ்பவர்கள்தாம் ஏராளம்.

 

நாம் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதுதான் நம் பேராசான் நமக்குக் காட்டும் வழி.

 

நேராக இருப்பதெல்லாம் சரியானதும் அல்ல; வளைந்திருப்பதெல்லாம் நம்மை வாட்டுவதுமல்ல!

 

அம்பும், ஈட்டியும் வளையாமல் நேராகத்தான் உள்ளன. இருப்பினும் அவை பிறரைத் தாக்கும். யாழானது வளைந்திருக்கும். ஆனால், அது நம் மனத்திற்கு இதமான இசையை அளிக்கும். ஆகையினால் தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது என்கிறார்.


கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினைபடு பாலாற் கொளல். – 279; - கூடா ஒழுக்கம்

 

கணை கொடிது = வளையாமல் நேராக இருக்கும் அம்பு கொடியது; யாழ் கோடு செவ்விது = யாழானது வளைந்திருந்தாலும் இனிமையான இசையை அளித்து மகிழ்விக்கும்; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் = அவ்வாறே ஒவ்வொருவரின் செயலைக் கவனித்தே முடிவு செய்ய வேண்டும். உருவம் ஏமாற்றலாம்.

 

வளையாமல் நேராக இருக்கும் அம்பு கொடியது. யாழானது வளைந்திருந்தாலும் இனிமையான இசையை அளித்து மகிழ்விக்கும். அவ்வாறே ஒவ்வொருவரின் செயலைக் கவனித்தே முடிவு செய்ய வேண்டும். உருவம் ஏமாற்றலாம்.

 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். மனமது செம்மையாக இருப்பின், பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக, நாம் நம் புறத்தோற்றத்தில் எந்தவித மாறுதலும் செய்யத் தேவையில்லை. உலகம் பழிக்கும் அறப் பிறழ்வுகளை தவிர்த்துவிட்டால் எந்த வேடங்களும் தேவையில்லை.

 

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின். – 280; - கூடா ஒழுக்கம்

 

உலகம் பழித்தது ஒழித்து விடின் = ஓய்வெடுக்கும் பருவத்தினர், சான்றோர்கள் பழிக்கும் செயல்களைத் தவிர்த்தாலே போதும்; மழித்தலும் நீட்டலும் வேண்டா = தலையை மொட்டை அடித்துக் கொள்வதோ, அல்லது, நீளமாகச் சடை முடியை வளர்த்துக் கொள்வதோ முக்கியம் அல்ல.

 

ஓய்வெடுக்கும் பருவத்தினர், சான்றோர்கள் பழிக்கும் செயல்களைத் தவிர்த்தாலே போதும். தலையை மொட்டை அடித்துக் கொள்வதோ, அல்லது, நீளமாகச் சடை முடியை வளர்த்துக் கொள்வதோ முக்கியம் அல்ல.

 

இந்தப் பாடலோடு இந்த அதிகாரத்தை நிறைவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து கள்ளாமை. நாளைத் தொடர்வோம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




コメント


Post: Blog2_Post
bottom of page