11/05/2022 (439)
நேற்று, குறளில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது. மன்னிக்க.
“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணாத் மாணத் தெறும்” --- குறள் 883; அதிகாரம் – உட்பகை
இது, நானே ஒவ்வொரு குறளையும் தட்டச்சு செய்வதால் நிகழ்வது. வெட்டி ஒட்டுதலைத் (Cut, copy, paste) தவிர்க்க வேண்டும் என்பதாலும், ஒரு முறையாவது எழுதிப் பார்ப்போமே என்பதாலும் முயல்கிறேன். இந்தத் தவறினை சரி செய்து வாசித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
பொருளில் குற்றமில்லாதபடி என் குருமார்கள் காப்பாற்றிவிட்டார்கள். அவர்கள் பொன்னார் திருவடிகளை என் மனம், மொழி, மெய்களால் வணங்கிப், போற்றித் தொடர்கிறேன்.
மாண் என்றால் மாட்சிமை, உயர்வு. “மாண்” நிறைந்தவர்கள் மாண்புமிகு ஆகிறார்கள்.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.” --- குறள் 3; அதிகாரம் – கடவுள் வாழ்த்து
“மாண” என்பதற்கு ‘மிகவும்’ என்ற பொருளில்
“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.” --- குறள் 102; அதிகாரம் – செய்நன்றியறிதல்
மாண்பிறந்த = மாண் தவறிய, மாணா = தரமற்ற
“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.” …குறள் 432; அதிகாரம் - குற்றங்கடிதல்
மேற்கண்ட குறள்கள் எனக்கு நானே ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளத் தொகுத்துள்ளேன். ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தையும் மன்னிக்கவும்.
சரி, நாம் இன்றையக் குறளுக்கு வருவோம்.
மனதில் தரமற்ற உட்பகை ஒருவருக்குத் தன் சுற்றத்தால் தோன்றிவிட்டால், அது அவரது இனத்திற்கே தரமற்ற தொல்லைகள் பலவும் தருமாம்.
“மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்.” --- குறள் 884; அதிகாரம் – உட்பகை
மனம்மாணா உட்பகை தோன்றின் = ஒருவன் மனதில் நமக்கு எதிராக தரமற்ற உட்பகைத் தோன்றிவிடின்; இனம்மாணா ஏதம் பலவும் தரும் = (அது) இனத்திற்கே தரமற்றத் தொல்லைகள் பலவும் தரும். ஏதம் = குற்றம், தொல்லை, துன்பம்.
அது என்ன தரமற்ற உட்பகை? தரமுள்ள உட்பகைன்னு ஒன்று இருக்கா என்ன?
“உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்கிறார் வடலூர் வள்ளல் பெருமான். அவர் துறவி. அவர் அதை வேண்டலாம்.
தலைமையில் இருப்பவர்கள் அவ்வாறு முற்றும் முழுதாக விலகி இருக்க முடியாதல்லவா?
நாம் செய்த ஒரு வினைக்காக, உட்பகைத் தோன்றியிருந்தால், அது தரமுள்ள உட்பகை என்று எடுத்துக் கொள்ளலாம். அதை அறிந்த உடன் அதனைச் சரி செய்ய வேண்டியது நமது பொறுப்பாகிறது. அதை அவர்களும் ஏற்றுக் கொண்டு நட்பாவதும் இயல்பு.
ஒன்றுமே இல்லாமல், பொறாமையின் குழவியாக உட்பகையை ஒருவர் வளர்ப்பாராயின் அப்போதுதான் அது தரமற்ற உட்பகை ஆகின்றது. அதையும் சரி செய்யும் பொறுப்பு தலைமைக்கு இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தவே இக்குறளை நம் பேராசான் வைத்துள்ளார்.
சரி செய்து விடுங்கள் அல்லது அதை வெளிப்படையானப் பகையாக நடத்துங்கள். இல்லையென்றால் அது உங்கள் இனத்திற்கே கேடு விளைவிக்கும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Комментарии