20/04/2023 (777)
‘ஒரு’ என்றால் ஒன்று என்று நமக்குத் தெரியும். ‘ஒரு’ என்றால் ஆடு என்றும் ஒரு பொருள் இருக்காம். ‘ஒரு’ என்றால் அழிஞ்சல் என்று ஒருவகை மரத்தையும் குறிக்குமாம்.
‘ஒருமை’ என்றால் தனிமை, பிரிந்து இருத்தல் என்றும் பொருள்.
ஒரு என்னும் தன்மை அமைந்து இருத்தல் ஒருமை.
‘ஒருவு’ என்றால் ஒழிதல், ஒழித்தல், விலக்குதல், நீக்குதல், தனிமைப்படுத்து என்று பொருள்.
‘ஒருவுக’ என்ற சொல்லை நம் பேராசான் ஒரு முறை பயன்படுத்தியுள்ளார். ஒருவுக என்றால் விலக்குக, தவிர்க்க என்று பொருள்.
நட்பாராய்தல் எனும் அதிகாரத்தில் ஒரு பாடலைப் பார்த்துள்ளோம். காண்க 21/12/2021 (301). மீள்பார்வைக்காக:
“மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.” --- குறள் 800; அதிகாரம் – நட்பாராய்தல்
மாசு அற்றார் கேண்மை மருவுக = உலகத்தோடு ஒத்த இருக்கும் குற்றமற்றவர்களின் நட்பை நாடுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக = மேற்சொன்னது போல நட்பு இல்லை என்றால் எதையாவது கொடுத்தும் தவிர்க்க.
உலகத்தோடு ஒத்த இருக்கும் குற்றமற்றவர்களின் நட்பை நாடுக; மேற்சொன்னது போல நட்பு இல்லை என்றால் எதையாவது கொடுத்தும் தவிர்க்க.
‘ஒருவுதல்’ என்ற சொல்லையும் ஒரு முறை பயன்படுத்தியுள்ளார். ஒருவுதல் என்றால் தவிர்த்தல், ஒழித்தல், விலக்கல்...
எந்தக் காலத்திலும், ஒரு செயலானது புகழொடு நல்லப் பயன்களைத் தராது என்றால் அந்தச் செயல்களை ஒருவுதல் வேண்டும் என்கிறார் நம் பேராசான்.
“என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா விணை.” --- குறள் 652; அதிகாரம் – வினைத்தூய்மை
புகழொடு நன்றி பயவா விணை = புகழொடு நல்லப் பயன்களைத் தராத செயல்(களை); என்றும் = எந்தப் படிநிலையில் இருந்தாலும்; ஒருவுதல் வேண்டும் = தவிர்த்தல் வேண்டும்.
எந்தப் படி நிலையில் ஒருவர் இருந்தாலும், புகழொடு நல்லப் பயன்களைத் தராத செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.
படிநிலைகள் என்பன மூன்று வகைப்படும். அவையாவன: பெருகல், சுருங்கல், இடைநிற்றல். அதாவது, உயர்ந்து இருக்கும் போதும் , தாழ்ந்து இருக்கும் போதும், ஒரு நிலையிலேயே இருந்தாலும்என்று விரித்துக் கொள்ள வேண்டும்.
‘நன்றி’ என்ற சொல் இம்மைப் பயன்களையும், ‘புகழ்’ என்பது மறுமைப் பயன்களையும் குறிக்கும் என்று அறிஞர் பெருமக்கள் விரிக்கிறார்கள்.
அதாவது, நாம் செய்யும் செயல்கள் இரண்டினையும் தரும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதை எதிர்முகமாக வலியுறுத்திச் சொல்கிறார்.
ஒரு செயல்; இரண்டு மாங்கனி!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments